சிங்கப்பூரில் வீடு வாங்க ஆசையா..? கிடுகிடுவென உயரும் விலை!!

சிங்கப்பூரில் வீடு வாங்க ஆசையா..? கிடுகிடுவென உயரும் விலை!!

சிங்கப்பூர்: தனக்கென ஒரு சொந்தமான வீடு இருக்க வேண்டும் என்ற எண்ணம் அனைவரிடத்திலும் உண்டு. சிலர் தங்கள் தகுதிக்கு ஏற்றார் போல் வீடுகளை கட்டுவதும் வாங்குவதும் உண்டு. வீட்டை கட்டும்போது ஒவ்வொன்றையும் பார்த்து ரசித்து கட்டுவார்கள். அதுவே கட்டிய வீட்டை வாங்குபவர்கள் என்றால் தனக்கு பிடித்தது போல் இருக்கிறதா.. வீட்டில் எல்லா வசதிகளும் உள்ளதா.. என்று பார்ப்பவர்கள் உண்டு. இப்படி வீட்டை பற்றி கனவு காண்பவர்கள் உண்டு.

சிங்கப்பூரில் தற்போது வீடு வாங்க நினைப்பவர்களுக்கு மறுவிற்பனை வீட்டின் விலையானது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. இந்த விலை உயர்வுக்கு காரணம் மறு விற்பனை வீடுகளின் தேவை அதிகரிப்பு.

சிங்கப்பூரில் BTO எனப்படும் தேவைக்கேற்ப கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்புகளும், மற்ற வீடுகளும் கிடைக்காத பட்சத்தில் அனைவரும் மறுவிற்பனை வீட்டையே வாங்க விரும்புகிறார்கள். மறு விற்பனை வீடுகளின் தேவை அதிகரிப்பதால் அதன் விலையும் பல மடங்கு உயர்ந்துள்ளது. இந்த ஆண்டு விலையானது மூன்று முதல் நான்கு விழுக்காடு வரை அதிகரிக்கூடும்.

BTO வீடு கிடைக்காதவர்கள் மறு விற்பனை வீட்டை நாடுகின்றனர். BTO அமைப்பால் கட்டப்படும் வீடுகள் ஒவ்வொரு ஆண்டும் 4 முறை வெளியிடப்படும். ஆனால் இந்த ஆண்டு மூன்று முறை மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. இதனால் 2000 வீடுகள் குறைவாக விற்கப்படுகின்றன. 1000-2000 வீடுகள் குறைவாக விற்கப்படுவதால் தேவை அதிகரிப்பின் காரணமாக விலையும் உயர்ந்துள்ளது.

வீடுகளின் தேவை அதிகரிப்பை தனக்கு சாதகமாக்கி கொண்டு, வீட்டை விற்பவர்கள் விலையை அதிகரிப்பதற்காக 40-50 நபர்களை ஒரே நேரத்தில் வரவழைத்து பேரம் பேசுவதுண்டு. திருமணம் செய்து கொள்பவர்களும் தங்களது உடனடி தேவைக்காக வீடு பார்ப்பதுண்டு. இரு தரப்பினரின் தேவை அதிகரிப்பால் விலையும் அதிகரித்துள்ளது. அனைத்து வசதிகளும் வேண்டும் என்று நினைப்பவர்கள் மறுவிற்பனை வீட்டை விரும்புகின்றனர்.

வீடு வாங்க நினைப்பவர்கள் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் அனைத்து வசதிகளும் உள்ளதா என்று பார்க்க வேண்டும். முடிவை தீர்மானிப்பதற்கு முன் அதைப்பற்றி நன்கு அறிந்தவர்களிடம் ஆலோசனை பெற்று தெரிந்து கொள்வது நல்லது.