ஸ்ரீ நித்யானந்தம் சுவாமிகள் இந்த உலகை விட்டு இறைவனடி சேர்ந்துள்ளார். இக்காலத்துக்குரிய சொற்பொழிவை ஆற்றி வந்தவர்.“ வாழ்க்கையில நிம்மதி வேணுமா? செத்துப் போ ´´ என பல்வேறு வித்தியாசமான சொற்பொழிவை பேசியுள்ளார். தனது சொற்பொழிவை சமூக சீர்திருத்தங்களுக்கு ஏற்றது போல் பேசியும் உள்ளார். ஆன்மீக வாழ்க்கையில் இல்லற வாழ்க்கையும் வாழ முடியும் என்ற கருத்தையும் கூறியுள்ளார். அந்த கருத்திற்கேற்ப வாழ்ந்தும் காட்டியுள்ளார்.
பிரம்ம ஸ்ரீ நித்யானந்தம் சுவாமிகள் சென்னையில் 1953-ஆம் ஆண்டு பெருமாள், ஜெயலட்சுமி தம்பதியினருக்கு மகனாக பிறந்தார். இவருடைய ஐந்தாவது வயதில் பெற்றோருக்கு இடையே மனக்கசப்பு ஏற்பட்டதால் பிரிந்துள்ளனர். இவருடைய சகோதரர்களை தாயார் தன்னுடன் அழைத்துச் சென்றுள்ளார். திருவள்ளுவர் மாவட்டத்தில் நல்லத்தூர் என்ற கிராமத்திற்கு தந்தை அவருடைய சகோதரியின் இல்லத்திற்கு அவரை அழைத்துச் சென்றுள்ளார். தந்தையாருக்கு உடல்நிலை சரியில்லாமல் நோய்வாய்பட்டு இறந்துள்ளார். அதன்பின், தன் வாழ்க்கையில் பல இன்னல்களை சந்தித்து இருக்கிறார். தமது ஐந்து வயதில் பள்ளிக்கு போக முடியாமல் வேலைக்கு செல்ல வேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளார். மாடு மேய்க்கும் வேலைக்கு சென்றுள்ளார். வேலை பார்த்துக் கொண்டிருந்த இடத்தில் சிறிய ஆலயம் ஒன்றில் அமர்ந்து சிறு வயதில் அவர் பட்ட இன்னல்களை யோசித்துப் பார்த்துள்ளார். சிறு வயதிலேயே எல்லோரையும் இழந்து, கடவுள் என்ற ஒன்று இருக்கா?என்பதைப் பற்றி யோசிக்க தொடங்கி உள்ளார்.
அந்தத் தேடல்கள் தான் அவரை ஞான பாதைக்கு அழைத்துச் சென்றதாம். பாம்பாட்டி சித்தர் பாடல்களை தமது பத்தாவது வயதை எட்டும் போது ஓர் நண்பர் மூலம் அறிந்து கொண்டுள்ளார்.
அவ்வப்போது சித்தர்கள், ஞானிகள், துறவிகளையும் சந்தித்து ஆசிகளையும் பெற்றுள்ளார்.ஞான மார்க்கத்தில் செல்ல முடிவெடுத்துள்ளார். அது சம்பந்தமான யோகா பயிற்சிகளிலும் ஈடுபட்டுள்ளார்.
அவர் அதில் வளர்ச்சியும் கண்டுள்ளார். அவருடைய பெரிய தாயாராகிய ஜானகி அம்மா அவரின் நிலைக்கண்டு மனம் வருந்தி தன்னுடன் அழைத்து சென்றார். அவருக்கு தையல் தொழிலை கற்றுக் கொடுத்து, ஞான மார்க்கத்திலும் கவனம் செலுத்தியுள்ளார். கொல்லிமலை சித்தரிடம் ஞான உபதேசம் பெற்றார். ஞான தேடலிலும் முழுமை பெற்றுள்ளார். அதன் பிறகு,பெரிய தாயாராகிய ஜானகி அம்மாளின் வேண்டுகோளுக்கு இணங்க 1974-ஆம் ஆண்டு வசந்தா என்ற அம்மையாரை திருமணம் செய்தார். “ஆன்மீக வாழ்க்கைக்கு இல்லறம் ஓர் தடையல்ல´´ என்ற கருத்தோடு இல்லற வாழ்க்கையும் ஆரம்பித்தார்.
இரண்டு மகன்கள்,ஒரு பெண் என மூன்று பிள்ளைகளைப் பெற்றார்.
இல்லற வாழ்க்கையும் வாழ்ந்து,ஞான உபதேசத்தையும் போதித்து வந்தார். எதார்த்த சிந்தனைகளோடு போதனைகளை உலகிற்கு வழங்கி வந்த ஸ்ரீ நித்தியானந்தம் சுவாமிகள் மறைவுக்கு அவருடைய ஏராளமான பக்தர்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.