வாகனங்கள், கட்டமைப்பு மீது இடித்துவிட்டு தப்பி சென்ற வாகன ஓட்டுநர்கள்!! விபத்தில் காயமடைந்த நபருக்கு கூட உதவாமல் ஓட்டம்!!

சிங்கப்பூரில் 3 ஓட்டுநர்கள் மீது இன்று(டிசம்பர் 13) குற்றம் சாட்டப்பட உள்ளது . மூவரும் வெவ்வேறு சம்பவங்களில் விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பி சென்றுள்ளார்கள்.

விபத்து ஏற்படுத்தி விட்டு முறையாக காவல்துறையிடம் தகவல் அளிக்கவும் இல்லை.இந்த விபத்துகள் இந்த ஆண்டு (2023) மார்ச் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை நடந்துள்ளன.அவர்களில் இருவர் வாகனங்கள் மீது மோதியுள்ளனர். மற்றொருவர் கட்டிடத்தில் மோதி விட்டு தப்பி சென்றுள்ளார்.

மூவரும் 29 முதல் 71 வயதுக்கு உட்பட்டவர்கள்.

29 வயதுடைய நபர் ஒருவர் ஆகஸ்ட் 3-ஆம் தேதி தெம்பனிஸ் விரைவு சாலையில் சென்று கொண்டிருந்தபோது அவருக்கு முன்னால் சென்ற காரின் பின்புறத்தில் தனது காரை மோதினார். இதனால் முன்னால் சென்ற கார் சாலையில் உள்ள தடுப்பு சுவரில் மோதியது.

காரின் ஓட்டுநர் படுகாயமடைந்தார் . அதன்பின் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விபத்தை ஏற்படுத்திய அந்த நபர், காயமடைந்த ஓட்டுநருக்கு உதவவில்லை. இது குறித்து காவல்துறையிடம் 24 மணி நேரத்துக்குள் புகார் அளிக்கவில்லை.

ஜூலை 29-ஆம் தேதி புக்கிட் பாத்தோக் வெஸ்ட்டில் உள்ள பிளாக் 136- இல் வாகனம் நிறுத்தும் இடத்திற்கு 36- வயதுடைய நபர் ஒருவர் காரை ஓட்டி சென்றார்.

அப்போது அவரது கார் அங்கு நிறுத்தப்பட்டிருந்த ஒரு கார், மூன்று மோட்டார் சைக்கிள்கள் மீது மோதியது.

விபத்தை ஏற்படுத்தி விட்டு அங்கிருந்து அவர் சென்று விட்டார். காவல்துறைக்கு 24 மணி நேரத்துக்குள் புகார் அளிக்க தவறிவிட்டார்.

மார்ச் 19-ஆம் தேதி Corporation road வழியாக 71 வயதுடைய நபர் ஒருவர் கனரக வாகனத்தை ஓட்டி சென்றார்.

அப்போது வாகனத்தின் மேல் இருந்த Boom arm அதிவேக ரயிலின் கட்டமைப்பை இடித்தது. இது குறித்து காவல்துறையிடம் அவர் புகார் செய்யவில்லை. அத்தோடு இந்த விபத்து ஏற்படுத்தி விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.

இன்று இவர்கள் மூவர் மீதும் குற்றம் சாட்டப்படும்.