இந்தோனேசியாவைச் சேர்ந்த 32 வயதான Eka Yuniarsih என்ற பெண்மணிக்கு, நம்பிக்கை துரோகம் மற்றும் முறைகேடு போன்ற குற்றங்களுக்காக 15 மாதங்கள் சிறைத் தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.இந்த தீர்ப்பு நவம்பர் 14-ஆம் தேதி(இன்று) வழங்கப்பட்டது.
இவர், தனது முதலாளியின் 95 வயதான, நடக்க இயலாத தந்தையை பார்த்துக் கொள்வதற்காக வேலைக்கு சேர்க்கப்பட்டார்.
அவர் அங்கு இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் இந்த குடும்பத்திற்காக பணி புரிந்துள்ளார்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் Eka விடம் முதியவர் தனது DBS வங்கி கணக்கில் இருந்து பணம் எடுப்பதற்கு உதவி கேட்டுள்ளார்.
Eka இந்த சூழ்நிலையை பயன்படுத்தி முதியவரின் வங்கி கணக்கில் இருக்கும் பணத்தின் மூலம் தனது கடனை அடைக்க திட்டமிட்டுள்ளார்.
இவர் முதியவரின் வங்கி கணக்கில் இருந்து ஜனவரி மாதம் 30 ஆம் தேதியிலிருந்து ஜூலை மாதம் 7 ஆம் தேதி வரை 89 முறை பணத்தை எடுத்து பயன்படுத்தி உள்ளார்.
ஜூலை மாதம் 10ஆம் தேதி அன்று முதியவர் உயிரிழந்தார்.
முதியவரின் இறப்பிற்கு பிறகு, வங்கி அறிக்கையை அவரது மகன் சரிபார்த்தார். அதில் அவருக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. கணக்கிலிருந்து பலமுறை பணம் எடுத்திருப்பது தெரிய வந்தது.
Eka மீது சந்தேகம் ஏற்படவே, அவர் காவல்துறையினரிடம் புகார் அளித்தார். காவல் துறையினர் அவரை கைது செய்தனர்.
Eka S$88600 பணத்தை எடுத்திருப்பது விசாரணையில் தெரியவந்தது.
தனது குடும்ப சூழ்நிலையை காரணம் காட்டி தண்டனையை குறைக்குமாறு Eka கேட்டுக்கொண்டார்.
மேலும் தனது முதலாளியிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.