சிங்கப்பூரில் கடலில் விழுந்து தனது உயிரை தானே மாய்த்து கொண்ட வெளிநாட்டு ஊழியரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
உயிரிழந்த நபர் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே நாட்டுச்சாலை பகுதியைச் சேர்ந்த ராமதாஸ்.
இவர் சிங்கப்பூர் கப்பல்துறை நிறுவனத்தில் மெக்கானிக் மற்றும் பிட்டராக பணியாற்றினார்.சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அவரது சக ஊழியரான அரவிந்த் பிரகாஷ் என்பவர் தனது முகநூல் பக்கத்தில்,“ராமதாஸ் தனது வாழ்க்கையை மார்ச் 9-ஆம் தேதியன்று மிக மோசமான முறையில் முடித்து கொண்டார்” என்று பதிவிட்டுள்ளார்.
அவரின் சடலம் மெரினா சௌத் வார்ப் நீரில் கடந்த மார்ச் 12-ஆம் தேதி கண்டெடுக்கப்பட்டது.மேலும் இச்சம்பவம் இயற்கைக்கு மாறான மரணம் என காவல்துறை தெரிவித்தனர்.
அவர் கடலில் மிகவும் கடினமாக உழைத்ததாகவும், ஒரு நாள் கூட நிலப்பகுதிக்கு சென்று வேலை செய்யும் வாய்ப்பு அவர் பணி புரிந்த கம்பெனி அளிக்கவில்லை என்று அரவிந்த் பதிவிட்ட பதிவில் கூறியுள்ளார்.
“கடல்சார்ந்த நிறுவனங்களில் முற்றிலும் லாபம் ஈட்டும் முதலாளிகள், தொழிலாளியின் வாழ்க்கையை எப்படி மதிப்பது என்பதை கற்றுக்கொள்ள வேண்டும்.மோசமான வாழ்க்கை நிலைமைகள் மற்றும் உணவை உட்கொள்வதன் மூலம் உங்கள் செல்வத்தை அதிகரிக்க தொழிலாளர்கள் உங்களுக்கு உதவுகிறார்கள்” என்று தனது பதிவிட்டில் அரவிந்த் கூறினார்.
ஆனால், வெளிநாட்டு தொழிலாளர்களின் மனநலம் குறித்து யாரும் கவலைப்படுவதில்லை” என்று தான் பதிவிட்ட பதிவில் குறிப்பிட்டு கூறினார்.
“ராமதாஸின் கதை தொடர்புடைய அதிகாரிகளையும், ஊழியர்களை அடிமைப் போல நடத்தும் நிறுவனங்களுக்கும் சென்றடையும் என்று நம்புகிறேன். கடலில் வேலை செய்யும் எந்த வெளிநாட்டவர்களாக இருந்தாலும், உங்களுக்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால் தயங்காமல் என்னை தொடர்பு கொள்ளுமாறு” கேட்டுக்கொண்டார்.
இந்த நிலையில், அவரது உடலை தாய்நாட்டிற்கு அனுப்பி வைப்பதற்காக அவரது சக ஊழியர்கள் பலரும் நிதி திரட்டி வருவதாகவும் கூறப்படுகிறது.
தனது உயிரை மாய்த்து கொள்வதற்காக ராமதாஸ் லாரி பேட்டரியைக் கட்டிக்கொண்டு கடலில் குதித்தாக கூறப்படுகிறது. அவரது உடல் கிட்டத்தட்ட மூன்று நாட்களுக்கு பிறகு உப்பிய நிலையில் கண்டெடுக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டது.