வேலை இழந்த ஊழியர்
வேலை இழந்த ஊழியர் களுக்கு உதவும் நிரந்தரத் திட்டம் ஒன்றை அரசாங்கம் அறிமுகப்படுத்த வேண்டும் என்று பைனியர் தனித்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் தேசிய தொழிற்சங்க காங்கிரசின் (என்டியுசி) உதவித் தலைமைச் செயலாளருமான பேட்ரிக் டே நேற்று நாடாளுமன்றத்தில் மீண்டும் அழைப்பு விடுத்தார்.
இத்திட்டம் பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்குத் திறன் மேம்பாட்டிலும் அவர்களை உகந்த வேலையில் சேர்த்துவைப்பதிலும் ஆதரவு வழங்கும் என்றார் அவர்.
பாரபட்சத்துடன் நடந்துகொண்டால் தண்டனை
ஊழியர்களுக்கு எதிராகப் பாரபட்சத்துடன் நடந்துகொள்ளும் நிறுவனங்களுக்குத் தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று திரு டே வலியுறுத்தினார்.
அடுத்த ஆண்டிறுதிக்குள் நியாயமான வேலையிட மசோதா சட்டமாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன்மூலம் உள்ளூர் ஊழியரணி பாதுகாக்கப்படும் என்றும் வர்த்தகங்களின் தேவைகள் பூர்த்தி செய்யப்படும் என்றும் திரு டே நம்பிக்கை தெரிவித்தார்.
சுயதொழில் செய்வோருக்கும் மகளிருக்கும் ஆதரவு
சுயதொழில் செய்பவர்களின் உற்பத்தித்திறனை மேம்படுத்தவும் அவர்களது செலவுகளைக் குறைக்கவும் அவர்கள் பயிற்சி பெற படித்தொகை வழங்க வேண்டும் என்று பாசிர் ரிஸ் பொங்கோல் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் இயோ வான் லிங் பரிந்துரைத்தார்.
மீண்டும் வேலை செய்ய விரும்பும் மகளிருக்கு அரசாங்கம் கூடுதல் ஆதரவு வழங்க வேண்டும் என்றார் அவர்.
படிப்படியாக உயரும் சம்பளத் திட்டம் விரிவாக்கம்
படிப்படியாக உயரும் சம்பளத் திட்டத்தில் குளிர்சாதனப் பெட்டி தொழில்நுட்பர், மின்சாரத் தொழில்நுட்பர் போன்ற கைத்தொழில் ஊழியர்களையும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று அங் மோ கியோ குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கான் தியாம் போ கூறினார்.
நடுத்தர வயது, மூத்த ஊழியருக்குக் கூடுதல் ஆதரவு
வேலையிலிருந்து விலகும் சூழ்நிலை ஏற்பட்ட நடுத்தர வயது, மூத்த ஊழியர்களுக்குப் பகுதிநேர வேலை தெரிவு வழங்கப்பட வேண்டும் என்று ஜாலான் புசார் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஹெங் சீ ஹாவ் பரிந்துரைத்தார்.
வாழ்க்கைத் தொழில் மாறுவோர் ஆதரவு விரிவாக்கம்
ஸ்கில்ஸ்பியூச்சர் வாழ்க்கைத் தொழில் மாற்றுத் தி்ட்டத்தைப் படிப்படியாக கூடுதல் துறைகளுக்கு விரிவாக்கம் செய்து மேலும் பலருக்குப் பலனளிக்க பாசிர் ரிஸ் பொங்கோல் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டெஸ்மண்ட் டான் நேற்று நாடாளுமன்றத்தில் கூறினார்.