சிம் கார்டு மோசடி…!! தொலைபேசி கடை ஊழியர்கள் இருவர் கைது..!!!

சிம் கார்டு மோசடி...!! தொலைபேசி கடை ஊழியர்கள் இருவர் கைது..!!!

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் உள்ள மூன்று தொலைபேசி கடைகளில் இம்மாதம் மார்ச் 5 ஆம் தேதி நடத்தப்பட்ட சோதனைகளில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் ப்ரீபெய்டு சிம் கார்டு மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.

விசாரணைக்கு மேலும் ஏழு ஆண்களும் ஒரு பெண்ணும் உதவி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

சோதனையில் சிக்கிய மூன்று தொலைபேசி கடைகளில் இரண்டு சிராங்கூன் சாலையில் அமைந்துள்ளன.

அவை ஏஆர்எஸ் டிஜிட்டல் வேர்ல்ட், யுனிவர்செல் மொபைல்ஸ் டெக்னாலஜி ஆகியவை ஆகும்.

மற்றொன்று உட்லேண்ட்ஸ் இண்டஸ்ட்ரியல் எஸ்டேட்டில் உள்ள ஐகேர்ஸ் மொபைல் சர்வீசஸ் கடை என்று கூறப்படுகிறது.

இந்த சோதனைகள், ப்ரீபெய்ட் சிம் கார்டுகளை மோசடியாகப் பயன்படுத்துவதற்கு உதவியதாக சந்தேகிக்கப்படும் தொலைபேசி விற்பனையாளர்கள் மற்றும் அவர்களின் ஊழியர்களை குறிவைத்தன.

கூடுதல் சிம் கார்டுகளைப் பதிவு செய்ய, ஏற்கனவே ப்ரீபெய்டு சிம் கார்டுகளுக்குப் பதிவு செய்யப்பட்ட வாடிக்கையாளர்களின் தகவல்களை அவர்கள் பயன்படுத்தியதாக நம்பப்படுகிறது.

சோதனையின் போது பல வகையான தொலைபேசிகள், தொலைபேசி பதிவுகள், சிம் கார்டுகள் போன்ற ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

10 பேர் மீது மூன்று குற்றவியல் குற்றச்சாட்டுகளின் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.அவற்றில் ஒன்று மற்றவர்களின் தனிப்பட்ட விவரத்தை சட்டவிரோதமாகப் பயன்படுத்தியது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், இந்தக் குற்றச்சாட்டுக்கு அதிகபட்சமாக S$10,000 அபராதம் மற்றும் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.