சிங்கப்பூர்: சிங்கப்பூரில் ஆள்மாறாட்ட மோசடி வழக்குகள் அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த மாதம் செப்டம்பரில் மட்டும் இதுபோன்ற மோசடிகளில் 6.7 மில்லியன் வெள்ளி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்க அதிகாரிகளை போன்று ஆள்மாறாட்டம் செய்ததாக 100 மோசடி வழக்குகள் பதிவாகியுள்ளதாக காவல்துறை மற்றும் சிங்கப்பூர் நாணய ஒரு கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளன.
மோசடி செய்பவர்கள் வங்கி அதிகாரிகளைப் போல் ஆள்மாறாட்டம் செய்து பாதிக்கப்பட்டவர்களை தொலைபேசியில் தொடர்பு கொள்கின்றனர்.
பாதிக்கப்பட்டவரின் வங்கிக் கணக்கில் இருந்து சந்தேகத்திற்கிடமான பணப்பரிமாற்றம் செய்யப்பட்டதாகவோ அல்லது அவர்களின் பெயரில் டெபிட் கார்டு வழங்கப்பட்டதாகவோ மோசடி செய்பவர்கள் கூறுகின்றனர்.
பாதிக்கப்பட்டவர்கள் அத்தகைய நிதி பரிவர்த்தனைகளை நிராகரிக்கும்போது, மற்றொரு மோசடி செய்பவர் ஒரு போலீஸ் அதிகாரி அல்லது சிங்கப்பூர் நாணய ஆணைய அதிகாரியைப் போல் நடிக்கிறார்.
சில நேரங்களில் மோசடி செய்பவர்கள் வீடியோ மூலமாகவும் தொடர்பு கொள்கிறார்கள்.மோசடி செய்பவர்கள் பாதிக்கப்பட்டவர்களை “பாதுகாப்பு கணக்குகளுக்கு” பணத்தை மாற்றுமாறு கேட்டுக்கொள்கிறார்கள்.
மேலும் எந்த ஒரு நேர்மையான அதிகாரியும் பாதுகாப்பு கணக்குகளுக்கு பணத்தை பரிமாற்றம் செய்யுமாறு கேட்க மாட்டார்கள் என்றும் மோசடிக்காரர்கள் மட்டுமே இது போன்ற செயல்களில் ஈடுபட வாய்ப்புண்டு என காவல்துறை பொதுமக்களை எச்சரித்தது.