வரும் ஜூலை மாதம் மூன்றாம் தேதியிலிருந்து பிளாஸ்டிக் பைகளுக்காக கட்டணம் வசூலிக்கப்படும்!

வரும் ஜூலை மாதம் மூன்றாம் தேதியிலிருந்து பெரிய பேரங்காடிகளின் வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு பிளாஸ்டிக் பைக்கும் குறைந்தபட்சம் 5 காசு கட்டணம் வசூலிக்கப்படும்.

இதனை இன்று நாடாளுமன்றத்தில் நீடித்த நிலத்தன்மை, சுற்றுப்புற மூத்த துணை அமைச்சர் ஏமி கோர் அறிவித்தார். சிங்கப்பூரில் இருக்கும் பேரங்காடிகளில் மூன்றில் இரண்டு பகுதி பேரங்காடிகளில் கட்டணம் வசூலிக்கப்படும்.

அதாவது, கிட்டத்தட்ட 400 பேரங்காடிகளில் கட்டணம் வசூலிக்கப்படும் என்று கூறினார். இந்த புதிய விதிமுறை காய்கறிகள், இறைச்சி அல்லது கடல் உணவுக்கு பயன்படுத்தப்படும் பைகளுக்கு பொருந்தாது.

இந்த புதிய திட்டம் NTUC FairPrice, Cold Storage, Giant,Sheng Siong, Prime முதலிய பேரங்காடிகளில் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

பொதுமக்களிடம் பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டைக் குறைக்கும் நோக்கத்திற்காக இந்த புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

கடந்த மாதம் 6-ஆம் தேதி பிளாஸ்டிக் பைகளுக்கு கட்டாயமாக கட்டணம் வசூலிக்க கோரும் மசோதா தாக்கல் செய்யப்பட்டது.