மூத்த குடிமக்களுக்காக 26 பகுதிகளில் கொண்டு வரப்படும் புதிய வசதிகள்…!!!

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் வீட்டு வசதி மேம்பாட்டுக் கழகம் (HDB) மூத்த குடிமக்கள் பயனடையும் வகையில் அங் மோ கியோ, புக்கிட் மேரா, குவீன்ஸ்டவுன் மற்றும் தோ பாயோ ஆகிய இடங்களில் மேம்பாட்டுத் திட்டங்களை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது.

இத்திட்டத்தின் வசதிகள் முதியவர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் இடம்பெற உள்ளது.

முதலில் அங் மோ கியோவின் சொங் பூன் பகுதியில் 4 சுற்றுப்புறங்களில் தொடங்க உள்ளது. பின்னர் புக்கிட் மேரா, குவீன்ஸ்டவுன் மற்றும் தோ பாயோ போன்ற பகுதிகள் வரை விரிவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏஜ் வெல் எஸ்ஜி திட்டத்துடன் இணைந்து மூத்த குடிமக்களுக்கான மேம்பாட்டுத் திட்டத்தை மாநகராட்சி அறிமுகப்படுத்துகிறது.இத்திட்டம் 2029-க்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இத்திட்டத்தில் முதியவர்கள் பயனடையும் வகையில் உடற்பயிற்சி பாதைகள்,மூலிகை தோட்டங்கள், நடைப் பயிற்சி மேற்கொள்வதற்கான இடங்கள், நடைபாதைகளில் ஓய்விடங்கள், ஞாபக மறதி உள்ளவர்கள் வழியை நினைவில் கொள்ள உதவும் கூறுகள்,3 தலைமுறைகளுக்கான விளையாட்டு மைதானங்கள் ஆகியவை அமைக்கப்பட உள்ளது.

இதன் மூலம் அவர்களுக்கு சுறுசுறுப்பான துடிப்பான ஒரு ஆரோக்கியமான வாழ்க்கைச்சூழலை ஏற்படுத்தித் தர முடியும்.

இம்மாதிரியான வசதிகளை ஏற்படுத்தி தருவதன் மூலம் முதியவர்களின் வாழ்க்கைச் சூழல் மேம்படுமென்று வீட்டு வசதி மேம்பாட்டு கழகம் கூறியுள்ளது.