சிங்கப்பூரில் 2025 இல் பிறக்கும் குழந்தைகளுக்கு சிறப்புப் பரிசு அறிவித்த அமைச்சர்…!!

சிங்கப்பூரில் 2025 இல் பிறக்கும் குழந்தைகளுக்கு சிறப்புப் பரிசு அறிவித்த அமைச்சர்...!!

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் அடுத்த ஆண்டு (2025)பிறக்கும் குழந்தைகளுக்கு சிறப்புப் பரிசு காத்திருக்கிறது.

சிங்கப்பூர் சுதந்திரமடைந்து 2025 உடன் 60 ஆண்டுகள் நிறைவடைகிறது.

இதையொட்டி இந்த சிறப்பு பரிசு வழங்கப்படும் என பிரதமர் அலுவலக அமைச்சர் இந்திராணி ராஜா அறிவித்துள்ளார்.

நவம்பர் 5ஆம் தேதி அது குறித்த தகவலை தனது முகநூலில் அமைச்சர் பதிவிட்டுள்ளார்.

சிங்கப்பூரின் வரலாற்றில் ஒரு மைல் கல்லாகக் கருதப்படும் 2025, சிங்கப்பூரர்களின் அடிப்படை விழுமியங்களைக் கொண்டாடும் ஆண்டாக இருக்கும் என்று அமைச்சர் கூறினார்.

குறிப்பாக, தங்களை ஒரே குடும்பமாக கருதும் பல்வேறு இன, மத மற்றும் பின்னணியில் உள்ள சிங்கப்பூரர்களின் தனித்துவமான குணத்தை அமைச்சர் எடுத்துரைத்தார்.

சிங்கப்பூர் வலுவாகவும் வளமாகவும் இருக்க அதிக எண்ணிக்கையிலான சிங்கப்பூர் குடும்பங்கள் தேவை என்று கூறினார்.

சிங்கப்பூர் கதையின் அடுத்த அத்தியாயத்தை எழுதுவதற்கு சிங்கப்பூர் குடியுரிமை பெற்ற குழந்தைகள் அதிகம் தேவை என்றார் குமாரி இந்திராணி ராஜா.

சிங்கப்பூர் தனது 60வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வேளையில், நாட்டின் எதிர்காலத்திற்கு திருமணம் மற்றும் குழந்தைப் பேறு ஆகியவற்றின் முக்கியத்துவத்தை நினைவூட்டும் வகையில், அடுத்த ஆண்டு பிறக்கும் SG60 குழந்தைகளுக்கு சிறப்புப் பரிசை வழங்க திட்டமிட்டுள்ளோம்,” என்று அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் விவரங்கள் பின்னர் வெளியிடப்படும் என்றும் அவர் கூறினார்.

பிரதமர் லாரன்ஸ் வோங் திங்கள்கிழமை (நவம்பர் 4) மக்கள் லீக்கில் SG60 கொண்டாட்டங்களைத் தொடங்கி வைத்து பேசினார்.

சிங்கப்பூருக்கான நமது உறுதிப்பாட்டை நாம் அனைவரும் புதுப்பித்து, நாட்டை சிறந்த எதிர்காலத்தை நோக்கி நகர்த்தும் காலமாக SG60 அமையும் எனக் கூறினார்.