இவ்வாண்டு மோசடிக்காரர்கள் நடத்திவந்துள்ள குலுக்கல் சீட்டு மோசடியில் குறைந்தது 55 பேர் சுமார் $507,000 தொகையை இழந்துள்ளதாகக் காவல்துறை கூறியுள்ளது.
சமயப் பிரமுகர்களுடன் தொடர்பிருப்பதாகக் கூறிக்கொள்ளும் மோசடிக்காரர்கள் வாட்ஸ்அப் அல்லது வேறு சமூக ஊடகத் தளங்கள் வழி குறுஞ்செய்திகள் அனுப்புவர்.
செல்வம் சேர்க்க விருப்பமா என்று குறிவைக்கப்பட்டவர்களைக் கேட்டு குலுக்கல் சீட்டு வாங்கித் தர முன்வருவர்.
பின்னர் குலுக்கலில் வென்றுள்ளதாகக் கூறி அதில் ஒரு பகுதியை முதலில் தங்களுக்கு அனுப்பி வைக்கும்படி மோசடிக்காரர்கள் கூறுவர்.
அவர்கள் கேட்ட தொகையை அனுப்பியபிறகு, தாங்கள் ‘வென்ற’ குலுக்கல் சீட்டுப் பணம் கைக்கு வராதபோதுதான் தாங்கள் மோசடிக்கு ஆளானது பற்றி பாதிக்கப்பட்டோருக்குத் தெரியவந்தது.