சிங்கப்பூரில் இந்த உணவுக்கு தடையா?

சிங்கப்பூரில் இந்த உணவுக்கு தடையா?

மலேசியாவின் போர்ட் டிக்சன் கடற்பகுதியில் காணப்படும் மசல்ஸ் என்ற சிப்பிவகை கடலுணவை சிங்கப்பூரில் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கடற்பகுதியில் காணப்படும் மசல்கள் நச்சுத்தன்மை வாய்ந்தவை என்று மலேசிய மீன்வளத்துறை, சிங்கப்பூர் உணவு நிறுவனத்திடம் தெரிவித்துள்ளது.

இந்த நச்சுத்தன்மை வாய்ந்த கடல் உணவை உண்டதால் 8 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக நெகெரி செம்பிலானின் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

அவர்களில் இரண்டு பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டதாக அது கூறியது.

இந்த கடல் உணவு எங்கிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது என்பதை சரி பார்ப்பதற்காக இறக்குமதி செய்யும் நிறுவனத்துடன் சிங்கப்பூர் உணவு நிறுவனம் இணைந்து பணியாற்றி வருகிறது.

மலேசியா மட்டுமல்லாமல் சீனா, ஜப்பான் மற்றும் வியட்நாம் போன்ற பிற நாடுகளில் இருந்தும் மசல்களை சிங்கப்பூர் இறக்குமதி செய்வதாக நிறுவனம் தெரிவித்தது.

சிங்கப்பூர் உணவு நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட கடல் உணவை மட்டுமே வாங்க வேண்டும் என்று பொதுமக்களை நிறுவனம் வலியுறுத்துகிறது.