சிங்கப்பூர் அதிபருக்கான தேர்தல் நெருங்கவிருக்கும் நிலையில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் ஒவ்வொன்றாக வெளிவந்த வண்ணம் இருக்கின்றது. இந்நிலையில் தொழிலதிபர் ஜார்ஜ் கோ சிங் கடந்த திங்கட்கிழமை (ஜூன் 12) சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்தார்.
63 வயதான இவர் Harvey Norman Ossia என்ற நிறுவனத்தின் தலைவராவார்.”சுயேச்சை வேட்பாளராக” களம் இறங்க விருப்பம் தெரிவித்த இவர் தொழிலதிபராக தனது நிதி மற்றும் நிர்வாக திறன்களை வலியுறுத்தி மக்கள் மனதை கவரும் யுத்தியை பயன்படுத்துகின்றார்.
“அலுவலகத்தின் ஒருமைப்பாட்டைப் பேணுவதற்கு, ஜனாதிபதி ஆனவர் அரசியலுக்கு அப்பாற்பட்டவராக இருக்க வேண்டும், அதே சமயம் தலைவராக மக்களால் உணரப்பட வேண்டும்” என்று அவர் ஒரு செய்திக்குறிப்பில் கூறினார்.
தற்பொழுது பதவி வகித்து வரும் ஜனாதிபதி ஹலிமா யாக்கோப்பின் ஆறு ஆண்டு பதவிக்காலம் செப்டம்பர் 13 ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில் அவர் மீண்டும் தேர்தலில் நிற்கப் போவதில்லை என்று அறிவித்தார்.
ஜனாதிபதித் தேர்தல் செப் 13 ஆம் நடக்கவிருக்கும் என ஊடக அறிக்கைகள் முன்னர் தெரிவித்திருந்தன.
முதலில் மூத்த அமைச்சர் தர்மன் சண்முக ரத்தினம் அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்தார். அதற்கு பிறகு, தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்த இரண்டாவது நபர் திரு கோ ஆவார்.
திரு கோவைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய ஐந்து விஷயங்கள் இங்கே:
1.குடும்ப வாழ்க்கை
திரு கோவின் முதல் மனைவி அவருக்கு 40 வயதாக இருந்தபோது இறந்தார். அதன் பிறகு மேடம் லைசா சுமாலியை மணந்தார். திரு கோவுக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர் – மகள்கள் ஜோனா, ஜோவினா மற்றும் இங்க்ரிட், மகன் ஜொனாதன்.
இவரது குழந்தை பருவத்தில் வறுமையின் பிடியில் சிக்கி தவித்தார். எனவே தனது 16 வது வயதில் பள்ளி படிப்பை பாதி நிறுத்திவிட்டு சிங்கப்பூரில் ஒரு செருப்பு தொழிற்சாலையில் வேலை செய்து எனது வாழ்க்கையை படிப்படியாக முன்னேற்றி இந்த நிலைமைக்கு கொண்டு வந்துள்ளார்.
குழந்தை பருவத்தில் இருந்தபோது அவர்களை வளர்ப்பதற்காக அவரது தாய் பட்ட கஷ்டத்தினை செய்தியாளர்களிடம் குறிப்பிட்டார்.
2.தொழிலதிபர் பாதை
வாழ்க்கையில் படிப்படியாக முன்னேறிய அவர் தனது 22 வயதில் ஷூ தயாரிப்பில் இருந்து தனது முதல் தொழிலை தொடங்கினார்.
ஆஸ்திரேலிய பிராண்டின் கீழ் ஆசியாவில் நுகர்வோர் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தளபாடங்களை விநியோகிக்கும் ஹார்வி நார்மன் ஒசியாவின் நிறுவனர் என்று அவர் நன்கு அறியும் அளவிற்கு பரிச்சயமானார்.
இன்று சந்தை நிலவரப்படி சுமார் S$45 மில்லியன் (US$33 மில்லியன்) சந்தை மூலதனம் கொண்ட SGX-பட்டியலிடப்பட்ட நிறுவனமான Ossia International இன் தலைவராக திரு கோ உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
3.பொது சேவை மற்றும் தொண்டு
2015 ஆம் ஆண்டில், அவரும் அவரது மனைவியும் பார்டர் மிஷன் என்ற அறக்கட்டளையை நிறுவினர். இந்த அறக்கட்டளையானது சிங்கப்பூரில் உள்ள வயதான அட்டை சேகரிப்பாளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மற்றும் இமயமலையில் உள்ள தொலைதூர சமூகங்களுக்கு சேவை செய்வதில் கவனம் செலுத்துகிறது.
மேலும் செஞ்சிலுவை சங்கத்தின் மூலமும் வறுமையில் வாடும் பலருக்கு உதவி புரிந்து வருகின்றார்.
4.மத நம்பிக்கை
கிறிஸ்துவ மதத்தை சேர்ந்த கோ மதம் சார்ந்த பல சமூக பணிகளில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் “நான் என் வாழ்க்கையை மூன்று தூண்களில் அமைத்துக் கொண்டேன். முதலாவது எனது குடும்பம் – எப்போதும் எனது குடும்பம் முதலில் – இரண்டாவது எனது தொழில். மூன்றாவது எனது பணிக் களம்,” என்றார்.
- இசை வாழ்க்கை
இவர் ஒரு இசை பிரியர் ஆவார். பாரம்பரிய பாடலில் கவனம் செலுத்தி கடந்த ஆண்டு லண்டன் டிரினிட்டி கல்லூரியில் இசையில் பட்டம் பெற்றார்.