ஜூனியர்களுக்கான உலக வில்வித்தை சாம்பியன் போட்டியில் ஆண்களுக்கான பிரிவில் இந்தியாவைச் சேர்ந்த பார்த் சலுங்கே தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.
அயர்லாந்து நாட்டில் உள்ள லிமரிக் என்னும் நகரில் ஜூனியர்களுக்கான உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் நடைபெற்றது. 21 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான இந்த போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த வீரர், கொரிய நாட்டின் வீரரை 7-3 என்ற கணக்கில் தோற்கடித்து தங்கப் பதக்கத்தினை வென்று சாதனை புரிந்துள்ளார்.
இதன் மூலம் இளையவர்களுக்கான உலக வில்வித்தை போட்டியில் ரிகர்வ் பிரிவில் முதல் முறையாக தங்கம் வென்ற இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார் பார்த் சலுங்கே. அது மட்டுமல்லாமல் மகளிர் பிரிவில் இந்தியாவை சேர்ந்த பாஜா கவுர், சீன நாட்டைச் சேர்ந்த வீராங்கனையை 7-1 என்ற புள்ளி கணக்கில் தோற்கடித்து வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆக மொத்தம் உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா 6 தங்கம், 1 வெள்ளி, 4 வெங்கலம் என மொத்தம் 11 பதக்கங்களை வென்று உலக புள்ளிபட்டியலில் இரண்டாவது இடத்தினை பிடித்துள்ளது. மேலும், கொரியா ஆறு தங்கம் மற்றும் நான்கு வெள்ளி பதக்கங்களுடன் முதலிடத்தினை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.