சிங்கப்பூர் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ள இந்திய சைவ உணவகம்!!

சிங்கப்பூர் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ள இந்திய சைவ உணவகம்!!

சிங்கப்பூர்: உணவு பிரியர்கள் வாடிக்கையாக செல்லும் உணவகங்களில் ஆனந்த பவன் உணவகம் மிகவும் பிரபலமானது. உணவின் தரம்,சுவை, பாரம்பரியம் என ஆனந்த பவனை தேடிச் செல்லும் மக்கள் கூட்டம் இருக்கின்றனர். அந்த பிரபல உணவகத்தில் ஒவ்வொரு உணவிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட சுவை இருப்பது அதன் தனிப்பட்ட அடையாளம் என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு அந்த உணவகம் உலக அளவில் இன்று பிரபலம் அடைந்து விட்டது.

சிங்கப்பூரில் செயல்பட்டு வரும் ஆனந்த் பவன் உணவகம் ‘சிங்கப்பூரில் உள்ள பழமையான இந்திய சைவ உணவகம்’ என அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் அந்த அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.

இது குறித்து சிங்கப்பூர் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸின் தலைவர் ஓங் எங் ஹுவாட் கூறியதாவது, “தொழில்நுட்ப மாற்றங்களுக்கு மத்தியில் ஆரோக்கியமான சைவ உணவுகளை வழங்கும் அதன் பாரம்பரியத்திற்கு உண்மையாக இருக்கும் ஆனந்த் பவன் உணவகத்திற்கு இந்த விருதை வழங்குவதில் பெருமிதம் கொள்கிறோம் “என்று கூறினார்.

உணவகத்தின் 100வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் நேற்று விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் இந்த விருது வழங்கப்பட்டு கெளரவிக்கப்பட்டது.

விருந்து உபசரிப்பு நிகழ்ச்சியில் அதிபர் தர்மன் சண்முகரத்தினம் மற்றும் அவரது மனைவி ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த உணவகம் தற்போது மூன்று தலைமுறையாக செயல்பட்டு வருகிறது. சிங்கப்பூரில் சையட் அல்வி சாலையில் அமைந்துள்ள உணவகத்தில் வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்ய இயந்திர மனித கருவிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

மேலும் 100 ஆண்டு உணவு பட்டியலை ஆனந்தபவன் அறிமுகப்படுத்தியுள்ளது. பல ஆண்டுகளாக வாடிக்கையாளர்களால் விரும்பப்படும் உணவுகள் இதில் இடம்பெற்றுள்ளன.

உணவகத்தின் பாரம்பரியம் மற்றும் வரலாற்று ஆவணங்கள் மற்றும் அலங்காரங்களை எடுத்துக்காட்டும் வகையில் காட்சிகளாக வைக்கப்பட்டது.

ஒரு சிறிய கண்காட்சியும் அந்த நிகழ்ச்சியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.