பொன்னமராவதி அருகே ஜெ.ஜெ.நகர் பகுதியில் தனிநபர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த மயான இடம்!!
பொன்னமராவதி, பிப்.21-
பொன்னமராவதி அருகே ஜெ.ஜெ.நகர் பகுதியில் தனிநபர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த மயான இடம் மீட்பு.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள தொட்டியம்பட்டி ஊராட்சி ஜெ.ஜெ.நகர் பகுதியில் தனி நபர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த 35 சென்ட் மயான இடம் நீதிமன்ற உத்தரவின்படி வருவாய்த்துறையினர் மற்றும் காவல்துறையினரால் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு நேற்று மீட்கப்பட்டது.
தொட்டியம்பட்டி ஊராட்சி ஜெ.ஜெ.நகர் பகுதியில் 2.10 ஏக்கர் பரப்பளவில் அனைத்து மதத்தினரும் பயன்படுத்தும் பொது மயானம் உள்ளது. இந்த மயானத்திற்கு அருகே உள்ள இடத்தினை தனிநபர்கள் 3 பேர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். மூவரில் ஒருவர் ஆக்கிரமிப்பு இடத்திற்கு பட்டா வழங்கக்கோரி மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார்.
அதன்பேரில் அந்த மனுவினை தள்ளுபடி செய்தும், மயானத்திற்கு சொந்தமானஇடத்தை மீட்கவும் ஐகோர்ட் அண்மையில் உத்தரவிட்டது. அதன்பேரில் செவ்வாய்க்கிழமை பொன்னமராவதி வட்டாட்சியர் எம்.சாந்தா தலைமையில் வருவாய்த்துறையினர் மயான இடத்தில் 35 செண்ட் பரப்பளவில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடு, நான்கு சக்கர வாகனம் பழுது நீக்கும் பட்டறை மற்றும் காலி இடம் உள்ளிட்டவற்றை ஜேசிபி இயந்திர உதவியுடன் அகற்றினர். பாதுகாப்பு ஏற்பாடுகளை பொன்னமராவதி காவல் ஆய்வாளர் பத்மா தலைமையிலான போலீஸார் செய்திருந்தனர்.