உலகளாவிய நிதி பற்றாக்குறையால் குழந்தைகளுக்கான தடுப்பூசி திட்டம் பாதிப்பு..!!

உலகளாவிய நிதி பற்றாக்குறையால் குழந்தைகளுக்கான தடுப்பூசி திட்டம் பாதிப்பு..!!

உலகளாவிய நிதி திட்டங்கள் குறைக்கப்படுவதால் குழந்தைகளுக்கான தடுப்பூசி திட்டம் பாதிக்கப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

உலகளவில் குழந்தைகளுக்கு தட்டம்மை, மூளைக்காய்ச்சல் மற்றும் ஹெபடைடிஸ் உள்ளிட்ட தொற்று நோய்கள் அதிகரித்து வருவதாக தெரிவித்தது.

இந்தச் சூழலில், நிதி உதவி குறைக்கப்பட்டதன் காரணமாக ஏப்ரல் மாத தொடக்கத்தில் கிட்டத்தட்ட பாதி நாடுகளில் அவசரகால நிலை மற்றும் வழக்கமான தடுப்பூசி திட்டங்கள் கணிசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

இது பெரும்பாலும் குறைந்த மற்றும் நடுத்தர வருமான நாடுகளில் உள்ள 108 உலக சுகாதார அமைப்பின் அலுவலகங்களின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக அளவில் அதிக நன்கொடை வழங்கும் நாடான அமெரிக்கா, “அமெரிக்கா ஃபர்ஸ்ட்” கொள்கையின் கீழ் உதவிகளை ஒழுங்குபடுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக, காவ்வி அமைப்புக்கு ஆண்டுதோறும் வழங்கப்பட்ட 300 மில்லியன் அமெரிக்க டாலர்களை ரத்து செய்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகள் நிதி, உலக சுகாதார அமைப்புக்கான நிதி போன்றவற்றை குறைத்து வருவதாக அமெரிக்க அரசாங்கத்தின் உள் ஆவணம் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும் 2026-2030 வரையிலான பணிகளுக்கு 9 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (S$11.83 பில்லியன்) தேவை என்று தடுப்பூசி கூட்டணி தெரிவித்துள்ளது.