இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான சிக்கிமில் சாதாரண அளவைவிட இரண்டு மடங்கு அதிகமாக பெய்த கனமழையைத் தொடர்ந்து Lhonak ஏரி உடைந்தது.
இதனால் அப்பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இந்த வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 74 ஆக உயர்ந்துள்ளது.
101 பேரைக் காணவில்லை என்றும், காணாமல் போனவர்களில் 14 ராணுவ வீரர்களும் அடங்குவர் என்றும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது.
சிக்கிம் மாநிலத்தில் 25 சடலங்களை மீட்பு படையினர் கண்டுபிடித்துள்ளனர். மற்றும் அதன் அண்டை மாநிலமான மேற்கு வங்கத்தில் அடித்து செல்லப்பட்ட 8 ராணுவ வீரர்களின் உடல்கள் உட்பட 49 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
சேதமடைந்த சாலைகள், மோசமான வானிலை மற்றும் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதால் உயிர்பிழைத்தவர்களை தேடும் பணி தடைபட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
துண்டிக்கப்பட்ட பகுதிகளில் சிக்கி தவிக்கும் சுமார் 2000 சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த 50 ஆண்டுகளில் ஏற்பட்ட மோசமான பேரழிவு இதுவே ஆகும் என்று தெரிவிக்கப்பட்டது.