இன்று நவம்பர் 15 , சுதந்திர போராட்டத் தியாகி தகைசால் தமிழர் சங்கரய்யா (102) காலமானார். கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான சங்கரய்யா , உடல் நலக் குறைவால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில் இன்று காலை 9 மணியளவில் இயற்கை எய்தினார்.
இது தமிழக மக்களுக்கும் கம்யூனிஸ்ட் கட்சி தோழர்களுக்கும் பெரும் இழப்பாக கருத்தப்படுகிறது. ஜூலை 15 ,1921 – கோவில்பட்டியில் நரசிம்மலு மற்றும் ராமானுஜம் தம்பதியினருக்கு மகனாக பிறந்தார் N. சங்கரய்யா அவர்கள்.
1937 – இல் மதுரை அமெரிக்கன் கல்லுரியில் வரலாற்றைப் பயின்றார்.
மேலும் தனது இளம் வயதிலேயே பொதுவுடைமை வாதியாக திகழ்ந்தார்.மார்க்சிஸ்ட் கட்சி உருவாக காரணமாக இருந்த 36 தலைவர்களில் இவரும் ஒருவர்.
மதுரை மாணவ சங்கத்தின் செயலாளராக தேர்வு செய்யப்பட்டு சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டார்.
1940 இல் உருவான மார்க்சிஸ்ட் கட்சியின் முதல் கிளையில் பணியாற்றிய 9 உறுப்பினர்களில் இவரும் ஒருவரே. இவ்வாறு தனது 80 ஆண்டு அரசியல் வாழ்க்கையில் முழுமையாக 8 ஆண்டுகளை சிறையிலேயே கழித்தவர். மேலும் தமிழக சட்ட பேரவை உறுப்பினராக 11 ஆண்டுகள் பணியாற்றியும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதுமட்டும் இன்றி “ஜனசக்தி” – யின் பொறுப்பாசிரியராகவும் , தீக்கதிர் நாளிதழின் ஆசிரியராகவும் விளங்கியுள்ளார். இத்தகைய , மகத்தான பொதுவுடைமைவாதியான இவருக்கு Dr பட்டம் இறுதி வரையிலும் கொடுக்கப்படவில்லை என்பது கவலைக்குறியது.
சங்கரய்யாவின் உடல் முதலில் குரோம்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டு பின் தி- நகரில் உள்ள அலுவலத்தில் வைத்த பின்னர் இறுதி ஊர்வலம் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி உள்ளார்.மேலும் பல அரசியல் பிரமுகர்கள் சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் நேரில் சென்றும் தங்களது வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர்.