நிலவில் இறங்கிய சந்திரயான்-3…….. இதற்கு பிறகு என்ன நடக்கும்?

2023,ஜூலை 14-ஆம் தேதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து எல்விஎம்-3 ராக்கெட்டில் சந்திரயான்-3 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது.இதற்குமுன் ஏவப்பட்ட சந்திரயான்-2 தோல்வியை தழுவியது.இதன்மூலம் கற்றுக்கொண்ட பாடத்தைக் கொண்டு சந்திரயான்-3 உருவாக்கப்பட்டு,3 ஆண்டுகள் கழித்து சந்திரயான்-3 விண்ணில் செலுத்தப்பட்டது.

நிலவில் இதுவரை யாரும் தடம் பதிக்காத தென்துருவப்பகுதியில் கால் பாதிக்க வேண்டும் என்ற குறிக்கோளோடு, இந்தியாவின் கனவுகளையும் சுமந்து தனது பயணத்தை 2023, ஜூலை 14-ஆம் தேதி சந்திரயான்-3 ஆரம்பித்தது.

இதுவரை நிலவில் அமெரிக்கா,பழைய சோவியத் யூனியன், சீனா ஆகிய மூன்று நாடுகள் மட்டுமே தரையிறங்கியுள்ளன. தற்போது அந்த பட்டியலில் இந்தியா நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது.

இந்தியாவின் கனவுகளை சுமந்து சென்ற சந்திரயான்-3 ஆகஸ்ட் மாதம் 23-ஆம் தேதி மாலை (நேற்று) சாஃப்ட் லேண்டிங் முறையில் நிலவின் தென்துருவப்பகுதியில் வெற்றிகரமாக தரையிறங்கி தனது தடத்தைப் பதித்தது. நிலவின் தென்துருவப் பகுதியில் தரையிறங்கிய முதல் நாடு இந்தியா நாடு என்ற பெருமை கிடைத்துள்ளது.உலக நாடுகளையே இந்தியா திரும்பி பார்க்க வைத்துள்ளது.

விக்ரம் லேண்டர் சாஃப்ட் லேண்டிங் முறையில் வெற்றிகரமாக தரையிறங்கி சாதனைப் படைத்ததை நேற்று (ஆகஸ்ட் 23) ISRO விஞ்ஞானிகள் அறிவித்தனர்.

விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கிய பின், அடுத்து என்ன நடக்கும் என்பது பற்றி உங்களுக்கு தெரியுமா?

விக்ரம் லேண்டரின் எடை 1745 கிலோ.விக்ரம் லேண்டர் தரையிறங்கியதும் அதனைச் சுற்றி புழுதி காற்று இருக்கும். அதனால் சுமார் மூன்று மணி நேரம் கழித்து தனது வேலையை தொடங்கும். நிலாவில் பல குண்டு குழிகள் தென்படும். அதோடு அங்கு புழுதிகள் அதிகமாக இருக்கும்.

புழுதிகள் அடங்கியபின், விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் வெளியே வரும். அதன் எடை 27 கிலோ.

பிரக்யான் ரோவரில் சோலார் பேனல் பொருத்தப்பட்டிருக்கும். அதன் மூலம் தனக்குத் தேவையான ஆற்றலைப் பெற்றுகொண்டு ஆய்வுகளைச் செய்யும்.

பிரக்யான் ரோவர் 0.036 km/hr அளவில் கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து தனது ஆராய்ச்சியை தொடங்கும்.6 சக்கரங்கள் பிரக்யான் ரோவரில் பொருத்தப்பட்டுள்ளது. அது 14 நாட்கள் நிலவில் தென்துருவப்பகுதியில் ஆராய்ச்சி நடத்தும். சோதனை செய்ததை விக்ரம் லேண்டர்க்கு அனுப்பும். விக்ரம் லேண்டர் இந்தியாவுடன் தொடர்பில் இருக்கும். ரோவர் அனுப்பிய தகவல்களை இந்தியாவுக்கு அனுப்பி தெரியப்படுத்தும்.

சந்திரயான்-3 விண்கலத்தின் திட்ட இயக்குநர் `விழுப்புரம்´ வீர முத்துவேல் என்பது குறிப்பிடத்தக்கது.