குவைத்தில் தீக்கு பலியான இந்தியர்களின் உடல்கள் இந்தியாவுக்கு கொண்டு வரப்படுகிறது!!
குவைத்தில் ஜூன் 12-ஆம் தேதி புதன்கிழமை அன்று ஊழியர்கள் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்பில் கோர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் குறைந்தது 49 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்களில் 45 பேர் இந்தியர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.
உயிரிழந்தவர்களில் ஒரு சிலரின் உடல்கள் அடையாளம் காண கடும் சிரமத்துக்கு ஆளானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஏனென்றால், ஒரு சிலரின் உடல்கள் முழுவதுமாக கருகி போனதால் அடையாளம் காண சிரமம் அடைந்ததாக தெரிவித்தனர்.
மேலும் உயிரிழந்தவர்களில் சிலர் தங்களது உயிரைக் காப்பாற்றி கொள்வதற்காக மாடி தளத்திலிருந்து கீழே குதித்து உயிரிழந்துள்ளனர்.
இறந்தவர்களில் 7 தமிழர்கள் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.
உயிரிழந்த இந்தியர்களின் உடல்கள் இன்று (ஜூன் 14) காலை குவைத்திலிருந்து இந்திய விமானப்படையின்(IAF) சிறப்பு விமானம் மூலம் கொச்சிக்கு கொண்டு வரப்படுகிறது.
இந்த சம்பவம் நிகழ்ந்த செய்தியை அறிந்தவுடன் இந்தியா வெளியுறவுத்துறை அமைச்சர் குவைத் சென்றார்.
குவைத் அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றி இறந்தவர்களின் உடல்களை இந்தியாவிற்கு விரைவாக கொண்டு வருவதற்கான நடவடிக்கையில் கீர்த்தி வர்தன் சிங் ஈடுபட்டார்.
கொச்சி விமான நிலையத்தில் கேரளா முதல்வர் பினராயி விஜயன் மற்றும் அமைச்சரவை உறுப்பினர்கள் உயிரிழந்தவர்களின் சவப்பெட்டிகளைப் பெறுவார்கள்.
சவப்பெட்டிகளைக் கொண்டு செல்ல ஆம்புலன்ஸ்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மத்திய, மாநில அரசால் நிதியுதவி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.
Follow us on : click here