செயின்ட் ஜோசப் தேவாலயத்தில் நடந்த தாக்குதல் சம்பவத்தில் தன்னலம் கருதாது உதவிய இருவருக்கு விருது..!!!

செயின்ட் ஜோசப் தேவாலயத்தில் நடந்த தாக்குதல் சம்பவத்தில் தன்னலம் கருதாது உதவிய இருவருக்கு விருது..!!!

சிங்கப்பூர்:அப்பர் புக்கிட் திமாவில் உள்ள செயின்ட் ஜோசப் தேவாலயத்தில் பாதிரியாரை தாக்கிய நபரை தடுத்து நிறுத்திய இருவருக்கு காவல்துறை பொதுநல உணர்வு விருது வழங்கப்பட்டுள்ளது.

நேற்று (நவம்பர் 9) மாலை குழந்தைகள் கலந்து கொண்ட கூட்டு பிரார்த்தனையின் போது பஸ்நாயக்கே கீத் ஸ்பென்சர் என்ற சிங்கள ஆடவர் பாதிரியாரை மடக்கும் கத்தியால் தாக்கியதாக கூறப்பட்டது.

இந்தத் தாக்குதலைக் கண்ட திரு. ரிச்சர்ட் டான் சாய் பூன் மற்றும் திரு. டேமியன் லியூ கீ  ரூய் ஆகியோர் தன்னலமின்றி தாக்குதலைத் தடுத்து நிறுத்தினர்.

“பாதிரியார் குத்தப்பட்டதை நான் பார்த்தபோது, ​​தாக்கியவரைத் தடுக்க வேண்டும் என்று தனது உள்ளுணர்வு தூண்டியது” என திரு.டான் கூறினார்.

“மற்றவர்கள் காயமடையாமல் இருக்க நான் ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தேன்,” என்று திரு.லியூ கூறினார்.

இருவரும், தேவாலயத்தின் அவசரகால நடவடிக்கை குழுவுடன் சேர்ந்து, பாதிரியாரை தாக்கியவரை மடக்கிப் பிடித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவரை கைது செய்தனர்.

அவர் மீது நாளை (நவம்பர் 11) குற்றம் சாட்டப்பட உள்ளது.

இதற்கு முன், அவர் 2019 இல் ஒருவரை வேண்டுமென்றே தாக்கியதற்காக ஒரு வருடம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், அதே நபர் பாதிரியாரை தாக்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தாக்குதலுக்கு உள்ளான பாதிரியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை முடிந்து அவரது உடல்நிலை சீராக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தேவாலயத்தில் வழக்கம்போல் பிரார்த்தனைகள் நடைபெறுகிறது.

மேலும் இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.