மூத்தோருக்கு உதவும் வகையில் தொண்டூழிய தூதர்களுக்கு பயிற்சி…

சிங்கப்பூர்:சிங்கப்பூரில் முதியவர்கள் பயன்பெறும் வகையில் ‘நாள்தோறும் நலமாய் மூப்படைதல் மன்றம்’ தொடங்கப்பட்டுள்ளது.

இந்த மன்றம் முதியவர்களின் நலன்களில் அக்கறை கொண்டு அவர்களை சிறப்பாக கையாள்வதற்கு ஏற்ற நடவடிக்கைகளை கற்றுக்கொள்ள தொண்டூழிய தூதர்களுக்குப் பயிற்சிஅளிக்கிறது.

முதியவர்களின் மன நலம் மற்றும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில் செயல்பாடுகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

கிளமெண்டியில் நடைபெற்ற சிறப்பு விழாவில் இந்த மன்றம் தொடங்கப்பட்டது.

இந்த விழாவில் தேசிய வளர்ச்சி மற்றும் வெளியுறவுத்துறை மூத்த துணை அமைச்சர் சிம் ஆன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

இந்த மன்றத்தின் நடவடிக்கைகள் வாரத்தின் திங்கள் மற்றும் வெள்ளி ஆகிய இரு தினங்களில் நடைபெறும்.

மூத்தவர்களை உற்சாகப்படுத்துவதற்கு சிறப்பு பயிற்சி பெற்ற தொண்டூழிய தூதர்கள் நடவடிக்கைகளை வழிநடத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக மன அறிவியல் மையத்துடன் இணைந்து மூத்தவர்களிடையே மன வலிமையை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை உருவாக்கியது.

மேலும் அவர்கள் கலைகளில் ஈடுபடுவது, இயற்கையில் நடப்பது, அறிவாற்றலை மேம்படுத்தும் செயல்களில் ஈடுபடுவது போன்ற நடவடிக்கைகளும் நிகழ்ச்சியில் இருந்தன.

தொண்டூழிய தூதர்களுக்கு அளிக்கப்படும் இத்தகைய பயிற்சியானது முதியவர்களை ஊக்கத்துடனும், சுறுசுறுப்பாகவும் வைத்திருக்க உதவும்.முதியவர்கள் இம்மாதிரியான பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபடுவதன் மூலம் தன்மீது நம்பிக்கை கொண்டு தன்னம்பிக்கை மிக்கவராக திகழ்வார்கள்.