போலி ஏஜென்டால் தன் உயிரை இழந்த வாலிபர்!

பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட செட்டிகுளம் பெரியார் நகர் பகுதியில் சுந்தர பாண்டியன் என்பவர் வசித்து வந்தார்.

இவருக்கு வயது 30. இவர் டிப்ளமோ இன்ஜினியரிங் படித்துள்ளார்.

இவர் படித்து முடித்த பிறகு சரியான வேலை கிடைக்காததால் வெளிநாட்டிற்கு சென்று வேலை செய்யலாம் என்று முடிவெடுத்துள்ளார்.

அதற்கான முயற்சியையும் மேற்கொண்டார். பல்வேறு நிறுவனங்களுக்கு அவருடைய விண்ணப்பங்களை அனுப்பி உள்ளார்.

அவருடைய நண்பர் ஒருவர் செந்துறை அருகே சோழன்குடி பகுதியைச் சேர்ந்த டிராவல்ஸ் ஏஜென்ட் பிரபாகரனை தொடர்பு கொள்ளும்படி அறிவுரை கூறியுள்ளார்.

சுந்தர பாண்டியன் பிரபாகரனைத் தொடர்பு கொண்டார். பிரபாகரன் சுந்தரபாண்டியனை வெளிநாட்டிற்கு வேலை செய்ய அனுப்புவதாக உறுதியளித்துள்ளார்.

இதற்காக சுந்தரபாண்டியனிடம் இரண்டரை லட்சத்தைப் பெற்றுக் கொண்டார். சுந்தரபாண்டியனை ஆறு மாதங்களுக்குள் வெளிநாட்டிற்கு அனுப்பி வைப்பதாகவும் உறுதியளித்துள்ளார்.

ஆனால், பிரபாகரன் அவரை அனுப்பி வைக்கவில்லை. சுந்தரபாண்டியன் பலமுறை அவரிடம் கேட்டும் அதற்கான உரிய பதிலைக் கூறவில்லை.

அதுமட்டுமல்லாமல் காலம் தாழ்த்தியும் வந்துள்ளார். இதனால் சுந்தர பாண்டியன் தனது பணத்தைத் திருப்பித் தருமாறு கேட்டுள்ளார்.

அதன்பின் பிரபாகரன் தனது செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டார்.

அவர் நடத்தி வந்த டிராவல்ஸ் ஏஜென்சியையும் மூடிவிட்டு தலைமறைவாகி விட்டார்.

அப்பொழுதுதான் பிரபாகரன் பல பேரிடம் பணத்தை பெற்றுக்கொண்டு மோசடி செய்தது தெரியவந்துள்ளது. இதனை அறிந்ததும் அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

பணத்தை இழந்ததால் மனம் உடைந்தும்,மனம் விரக்தியில் இருந்தார்.

பிப்ரவரி மாதம் 15-ஆம் தேதி அவருடைய வீட்டிலிருந்து வெளியே சென்று ஆள் நடமாட்டம் இல்லாத வயல்வெளி பகுதிக்குச் சென்று அங்கு அரளி விதையை அரைத்து குடித்து மயங்கி கிடந்துள்ளார்.

சுந்தர பாண்டியன் மயங்கி கிடந்ததைக் கண்ட பொதுமக்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அவரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஆனால், அவர் பிப்ரவரி 16-ஆம் தேதி அதிகாலை உயிரிழந்தார். இவருடைய தந்தை காவல்துறையில் புகார் அளித்தார். காவல்துறை இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.