சிங்கப்பூரில் குழந்தைகள் வாழ்க்கையின் அடிப்படை குணங்களைத் தெரிந்து கொள்ள புதிய முயற்சி!!

சிங்கப்பூரில் குழந்தைகள் வாழ்க்கையின் அடிப்படை குணங்களைத் தெரிந்து கொள்ள புதிய முயற்சி!!

குழந்தைகளுக்கு வாழ்க்கையில் அடிப்படை குணங்களை கற்றுக் கொடுக்கும் புதிய கற்றல் நிகழ்ச்சி …
சிங்கப்பூர்: இன்றைய பரபரப்பான காலகட்டத்தில் பெற்றோர்களும் குழந்தைகளும் ஒருவித அழுத்தமான மனநிலையில் தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இன்று பெரும்பாலான குழந்தைகளின் கையில் மொபைல் போனின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும் இடையிலான நெருக்கம் மற்றும் புரிதல் அங்கு குறைய ஆரம்பிக்கிறது. பொதுவாக குழந்தைகளுக்கு பெற்றோர்கள் மீதான அன்பு பற்றிய புரிதல் இருப்பதில்லை. பெற்றோர்களாகிய நாம் அவர்களுக்கு பாதுகாப்பாகவும் அரவணைப்பாகவும் இருக்க வேண்டியது அவசியம்.

குழந்தை வளர்ப்பை பொறுத்த வரை அவர்களுக்கு நல்லவற்றை சொல்லிக் கொடுத்து சமூகத்தில் சிறந்த நிலையை அடைவதற்கு நாம் ஒரு அடித்தளமாக இருக்க வேண்டும். அதற்கு நாம் அவர்களிடத்தில் நட்பான முறையில் ஒரு அன்பான பிணைப்பை ஏற்படுத்திக் கொள்ள முயற்சிக்க வேண்டும். சிறு பிள்ளைகள் ஏதேனும் தவறு செய்தால் கண்டிப்பான முறையில் கண்டிக்காமல் அன்பான முறையில் எடுத்துக் கூறி புரிய வைக்க வேண்டும் ‘நான் கெட்டவன்’, நான் தவறு செய்து கொண்டே இருக்கிறேன்’,’ நான் இப்படிதான்” போன்ற எதிர்மறையான எண்ணங்களை அவர்களிடம் திணிப்பது தவறு. குழந்தைகளிடம் அன்பான முறையில் பேசி வாழ்க்கையின் அடிப்படை குணங்களை வளர்த்துக் கொள்வதற்கு நாம் அவர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.

அப்படிப்பட்ட ஒரு அடித்தளத்தை குழந்தைகளுக்கு உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது சிங்கப்பூரின் தேசிய கலைக்கூடம் மற்றும் Families of Life இயக்கம்.

இவ்விரு இயக்கமும் சேர்ந்த நடத்தும் புதிய கற்றல் திட்டத்தில் பாலர் குழந்தைகள் குடும்ப மதிப்புகளை அறிந்து கொள்கின்றனர்.

நான்கு முதல் ஆறு வயது வரையிலான மாணவர்கள் தேசிய கலை சேகரிப்புகளை ஆராய்ந்து அவற்றை தங்கள் சொந்த குடும்ப அனுபவங்களுடன் ஒப்பிடலாம்.

குடும்பப் பிணைப்பு, அர்ப்பணிப்பு, அன்பு மற்றும் அரவணைப்பு போன்ற குணங்களை வளர்க்க அவர்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய இத்திட்டம் 2026 வரை தொடரும். இதில் இதுவரை 3,000 மாணவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.