பொன்னமராவதி வட்டத்தில் தமிழக முதல்வரின் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டமுகாம்!!

பொன்னமராவதி வட்டத்தில் தமிழக முதல்வரின் "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" திட்டமுகாம்!!

பொன்னமராவதி,ஜன.31-
பொன்னமராவதி வட்டத்தில் தமிழக முதல்வரின் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டமுகாம் நடைபெற்றது.


முகாமிற்கு மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா தலைமை வகித்தார். முகாமின் தொடக்கமாக ஆலவயல் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் கல்வித்தரம், குழந்தைகளுக்கான உணவின் தரம் ஆகியவற்றை ஆய்வு மேற்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து ஆலவயல் கிராம நிர்வாக அலுவலகத்தின் செயல்பாடுகள் கால்நடை மருந்தகத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். ஆலவயல் தொடக்க வேளாண்மை கடன் சங்கத்தில் நியாய விலை கடையில் விநியோகம் செய்யப்படும் குடிமை பொருட்கள் இருப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டு டாம்கோ திட்டத்தின் கீழ் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ 8.66 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கடன் உதவியை வழங்கினார்.

அம்மன்குறிச்சி ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருந்து பொருட்கள் இருப்பு மற்றும் பிரசவத்திற்கு பின்னர் தாய்மார்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை குறித்து தாய்மார்களிடம் கேட்டறிந்தார்.

அதனைத் தொடர்ந்து தாய்மார்களுக்கு குழந்தை நல பரிசு பெட்டகத்தை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். முதலமைச்சரின் கிராமப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ 1.கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் உலகம்பட்டி – கண்டியாநத்தம் சாலை பணி, கண்டியாநத்தம்- கருமங்காடு சாலை பணி ஆகியவற்றை பார்வையிட்டார்.

மேலைச்சிவபுரி கணேசர் கலை அறிவியல் கல்லூரியில் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் பயன்பெற்றுள்ள கல்லூரி மாணவிகளிடம் கலந்துரையாடினார்.

அதனைத் தொடர்ந்து பொன்னமராவதி வட்டாட்சியர் அலுவலகத்தில் அனைத்து துறை அரசு அலுவலர்களுடன் கலந்தாய்வு மேற்கொண்டார் ஆய்வின்போது பொது மக்களுக்கு விரைவாக சென்று சேர்வதை உறுதி செய்திட அறிவுறுத்தினார்.

மேலும் பொதுமக்களிடம் குறை கேட்டறிந்து மனுக்களை பெற்றார்.மேலும் பொன்னமராவதி பேருந்து நிலையத்தின் அடிப்படை வசதி குறித்தும் வலையப்பட்டி அரசு மருத்துவமனையின் மருந்துகளின் இருப்பு மருத்துவர் செவிலியர்கள் வருகை பதிவேடு அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

இந்நிகழ்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே, மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, தனி மாவட்ட வருவாய் அலுவலர்கள் சரவணன், ரம்யா தேவி, இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் தெய்வநாயகி, பொன்னமராவதி வட்டாட்சியர் சாந்தா மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் பங்கேற்றனர். மேலும் உங்கள் ஊரில் உங்களை தேடி சிறப்பு திட்ட முகாமில் மாவட்ட ஆட்சியர் நேற்று காலை 9 மணி முதல் பொன்னமராவதி தாலுகாவில் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று தீர்வு காணும் வகையில் இரவு பொன்னமராவதியில் பயணியர் தங்கும் விடுதியில் தங்கியுள்ளார்.

மேலும் பொது மக்களின் கோரிக்கைகளை ஆய்வு செய்து பார்வையிட்டு வருகின்றார்.