சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய சுப்பிரமணி சுவாமி!! வெகுசிறப்பாக நடந்த தைப்பூசத் தேரோட்டம்!!

சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய சுப்பிரமணி சுவாமி!! வெகுசிறப்பாக நடந்த தைப்பூசத் தேரோட்டம்!!

காரையூர், ஜன.26 –
புதுக்கோட்டை மாவட்டம் காரையூர் அருகே உள்ள வையாபுரி சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது.இக்கோவிலில் ஆண்டுதோறும் தை பூசதேரோட்டம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு கடந்த 17-ந்தேதி கொடி ஏற்றத்துடன்திருவிழா தொடங்கியது.இதைத்தொடர்ந்து விழா நாட்களில் தினமும் சுப்பிரமணிய சுவாமிக்கு காலையிலும்,மாலையிலும் வீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடந்தது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தைப்பூச தேரோட்டம் நேற்று நடந்தது. இதையொட்டி சிறப்பு அலங்காரத்தில் சுப்பிரமணிய சுவாமி தேரில் எழுந்தருள செய்தனர்.இதையடுத்து மாலை 4 மணிக்கு மேள,தாளம் முழங்க, வாணவேடிக்கையுடன் திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்தனர்.

தேர் முக்கிய வீதிகளின் வழியாக அசைந்தாடி வந்தது. ஒவ்வொரு வீதியிலும் பக்தர்கள் கூடிநின்று தேங்காய்,பூ,பழம் வைத்து சுப்பிரமணிய சுவாமிக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர்.

மாலை 6மணிக்கு தேர் நிலையை வந்தடைந்தது.பின்னர் சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு ஆராதனை நடந்தது. இதில் காரையூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தேரோட்டத்தையொட்டி விழாவிற்கான ஏற்பாடுகளை விழா குழுவினரும் வையாபுரி மற்றும் சுற்றுவட்டார ஊர் பொதுமக்களும் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை காரையூர் போலீசார் செய்திருந்தனர்.