சிங்கப்பூரில் தனது முதலாளியின் $57,000 சிங்கப்பூர் டாலர் மதிப்பிலான நகைகளைத் திருடிய குற்றத்திற்காக 39 வயதான இந்தோனேசியாவைச் சேர்ந்த ஸ்ரீ ஹஸ்துதி என்ற பணிப்பெண்ணுக்கு 15 மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
இவர் திருடிய பொருட்களை அடகு வைத்து, அதன் மூலம் கிடைத்த பணத்தை இந்தோனேசியாவில் உள்ள தனது குடும்பத்தினருக்கு அனுப்பி வைத்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது.
ஹஸ்துதி, Marine Parade-ல் வசித்து வந்த 43 வயதான ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த ஒருவரின் வீட்டில் பணிபுரிந்தார்.
கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரை முதலாளியின் படுக்கை அறையில் இருந்து 66 பொருட்களை இவர் திருடியதாக தெரிவித்தனர்.
திருடப்பட்ட பொருட்களில் தங்கம் மற்றும் வைர நகைகள், ரோலக்ஸ் வாட்ச் ஆகியவை அடங்கும்.
ரோலெக்ஸ் வாட்ச் மதிப்பு மட்டும் சுமார் $20,000 சிங்கப்பூர் டாலர் என்று தெரிவிக்கப்பட்டது.
பொருட்கள் காணாமல் போனதை அறிந்த முதலாளி அக்டோபர் 1ஆம் தேதி அன்று காவல்துறையிடம் புகார் அளித்தார்.
விசாரணையில் ஹஸ்துதியிடம் 31 அடகுக் கடை ரசீதுகள் இருந்தது கண்டறியப்பட்டது.
மேலும் திருடியதாக குற்றம் சாட்டப்பட்ட ஹஸ்துதி தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
அடகுக் கடையில் இருந்து சுமார் $41,000 சிங்கப்பூர் டாலர் மதிப்பிலான பொருட்களை காவல்துறையினர் மீட்டெடுத்தனர்.
ஆனால் மற்ற பொருட்களை மீட்க முடியவில்லை என்று அவர்கள் தெரிவித்தனர்.
தனது குடும்பத்தை கருத்தில் கொண்டு தனக்கு வழங்கப்பட்ட தண்டனையை குறைக்குமாறு ஹஸ்துதி கேட்டுக் கொண்டார்.