ஒரு வாரத்திற்கு மேலாக சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் 41 தொழிலாளர்கள்!! மீட்கும் முயற்சியில் தீவிரம்!!

இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள சுரங்கப்பாதை இடிந்து விழுந்து ஒரு வாரத்திற்கும் மேலான நிலையில் பல்வேறு பிரச்சனைகள் காரணமாக அங்கு சிக்கி உள்ள தொழிலாளர்களை மீட்க முடியவில்லை என்று மீட்பு படையினர் கூறினர்.

சுரங்கப் பாதையில் சிக்கி உள்ள தொழிலாளர்களுக்கு சிறிய குழாய் மூலம் ஏற்கனவே தண்ணீர், உலர் உணவுப் பொருட்கள், ஆக்ஸிஜன், மருந்து பொருட்கள் போன்றவற்றை அனுப்பி வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தற்போது அவர்களுக்கு பெரிய குழாய் மூலம் சமைத்த உணவை வழங்கவும் முயற்சி செய்து வருவதாக அவர்கள் தெரிவித்தனர்.

சிக்கி உள்ளவர்களை மீட்க ஏற்கனவே எடுக்கப்பட்ட முயற்சிகள் தோல்வியுற்ற நிலையில், தற்போது புதிய முயற்சியை மீட்புப் படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

அதன் அடிப்படையில் மலை உச்சியில் இருந்து செங்குத்தாக துளையிட்டு சுரங்கப்பாதைக்குள் சிக்கி உள்ள தொழிலாளர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

தொழிலாளர்கள் பாதுகாப்பாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் அவர்கள் எப்போது மீட்கப்படுவார்கள் என்பது குறித்த தகவலை அவர்கள் தெரிவிக்கவில்லை.

மேலும் தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்தினருடன் பேசுவதற்கு ஏதுவாக கேமரா அல்லது தொலைபேசி இணைப்பை அமைத்துத் தரவும் அதிகாரிகள் ஏற்பாடு செய்து வருகின்றனர்.