சதி திட்டம் தீட்டி பணத்தை பறிக்க திட்டமிட்ட கும்பல்!! கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 16 வயது சிறுவன்!!

சிங்கப்பூரின் Punggol-ல் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மூன்று பேரை நவம்பர் 18ஆம் தேதி அன்று காவல்துறை கைது செய்தனர்.

இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 33 வயதான நபர் ஒருவர் $81,000 சிங்கப்பூர் டாலருக்கு கிரிப்டோ டோக்கன்களை வாங்க முயன்றார்.

அறிமுகம் இல்லாத சந்தேக நபரின் அறிவுறுத்தலின்படி, 16 வயதுடைய வாலிபர் ஒருவரை Punggol field-ல் அவர் சந்தித்தார்.

அவர் பணத்தை சரி பார்க்கும் பொழுது அந்த வாலிபர் பணப்பையை பறித்துக் கொண்டு தப்பி ஓடியதாக தெரிவிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்டவர் அந்த வாலிபரை துரத்தி பிடிக்க முயன்ற போது அவர் சமையல் கத்தியை எடுத்தார் என்றும், பின்பு அதை கீழே போட்டதாகவும் தெரிவித்தனர்.

இரண்டு ஆண்கள் மற்றும் ஒரு பெண் சேர்ந்து அந்த வாலிபரை மடக்கி பிடித்தனர். பிறகு அந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்தக் குற்றத்தில் தொடர்புடைய 33 மற்றும் 27 வயதான மேலும் இருவர் அதே நாளில் கைது செய்யப்பட்டனர்.

நவம்பர் 20ஆம் தேதி (இன்று) 16 வயது சிறுவன் மற்றும் 33 வயதுடைய நபர் மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

மேலும் 27 வயதுடைய நபரிடம் விசாரணைகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தனர்.

பொது இடங்களில் அதிகளவு பணத்தை எடுத்துச் செல்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்று காவல்துறையினர் அறிவுறுத்தினர்.