சிங்கப்பூர் உணவு அமைப்பும் (SFA), சுகாதார அமைச்சகமும் (MOH) ஒருங்கிணைந்து KG கேட்டரிங் உணவு நிறுவனத்தில் ஆய்வு நடத்தியது. அதிகாரிகள் மூன்று முறை அதிரடியாக சோதனை நடத்தினர். இதில் பல சுகாதார குறைபாடுகள் வெளிச்சத்துக்கு வந்தது.
அங்கு அசுத்தமான முறையில் இடங்களை வைத்திருந்தது, உணவு பொருட்களின் சேமிப்பு முறையற்ற முறையில் இருத்தல், கரப்பான்பூச்சிகள் மற்றும் எலிகள் என பல சுகாதார குறைப்பாடுகள் இருப்பது தெரியவந்தது.
இந்நிறுவனம் குறித்து வந்த புகார்களை அடுத்து சோதனை நடவடிக்கை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டது.
அந்நிறுவனம் வழங்கிய உணவை உண்ட 92 பேருக்கு இரப்பை குடல் அலர்ஜி ஏற்பட்டதாக புகார்களில் கூறப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் கடந்த 2022-ஆம் ஆண்டு செப்டம்பர் 20-ஆம் தேதிக்கும் இவ்வாண்டு மார்ச் 11-ஆம் தேதிக்கும் இடையில் நடந்துள்ளதாக சிங்கப்பூர் உணவு அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.
மருத்துவமனையில் எவரும் அனுமதிக்கப்படவில்லை என்றும் கூறியது.
அந்நிறுவனத்தின் குறைபாடுகள் வெளிச்சத்துக்கு வந்த பிறகு கடந்த 2022-ஆம் ஆண்டு நவம்பர் 9-ஆம் தேதி முதல் இவ்வாண்டு பிப்ரவரி 1-ஆம் தேதி வரை அதன் செயல் நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்த உத்தரவுவிடப்பட்டது.
அவைகள் சரி செய்தபின் தற்காலிக தடை நீக்கப்பட்டது.
இத்தகைய குற்றத்திற்காக அந்நிறுவனத்திற்கு 6000 வெள்ளி அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.இதனை நேற்று (நவம்பர் 1) சிங்கப்பூர் உணவு அமைப்பு தெரிவித்தது.
உணவு தயாரித்து விநியோகம் செய்யும் நிறுவனங்கள் தூய்மையாக இடங்களைப் பராமரிப்பது அவசியம் என்று சிங்கப்பூர் உணவு அமைப்பு அறிவுறுத்தியது.