இஸ்ரேல் நாட்டில் கார் மோதியதால் அறுபட்ட நிலையில் இருந்த சிறுவனின் தலையை ஒட்ட வைத்து சாதனை படைத்துள்ளனர் மருத்துவர்கள். 12 வயதான இஸ்ரேல் சிறுவனின் தலையினை சிக்கலான அறுவை சிகிச்சையின் மூலம் மீண்டும் பொருத்தியுள்ளனர்.
இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த சுலைமான் ஹசன் எனப்படும் சிறுவன் சைக்கிள் ஓட்டி சென்ற பொழுது, எதிர்பாராத விதமாக காரின் மீது மோதினான். இதில் சிறுவனின் கழுத்து மற்றும் தலைப்பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
மேலும் சொல்லப்போனால் கிட்டத்தட்ட கழுத்தானது தலையில் இருந்து துண்டிக்கப்பட்ட நிலையில் சிறிதளவு ஒட்டிக் கொண்டு மட்டுமே இருந்துள்ளது. மருத்துவமனைக்கு சென்ற பிறகு, உடனே அறுவை சிகிச்சைக்கு மருத்துவர்கள் ஏற்பாடு செய்தனர். பல மணி நேரம் நடைபெற்ற அறுவை சிகிச்சையில், பல பிளேட்டுகளை பொருத்தி, புதுமையான தொழில்நுட்பங்களை புகுத்தி கிட்டத்தட்ட தனியே, துண்டாகும் நிலையில் இருந்த கழுத்தினை ஒட்ட வைத்து பெரும் சாதனை புரிந்துள்ளனர்.
பொதுவாக குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை செய்வது என்பது மிகவும் கடினம். நரம்பு, உணர்திறன் போன்றவை இழந்திருந்த நிலையில் சிறுவனை எழுந்து நடக்க வைத்திருக்கின்றனர் இஸ்ரேல் மருத்துவர்கள். கடந்த மாதம் இந்த அறுவை சிகிச்சை நடைபெற்ற நிலையில், இந்த மாதம் அச்சிறுவன் எழுந்து நடந்திருக்கின்றான். இந்நிலையில், சிறுவனின் பெற்றோர் கண்ணீர் மல்க மருத்துவருக்கு நன்றி தெரிவித்தனர்.