Singapore News in Tamil

சுற்றுலா பயணிகளை ஏற்றி சென்ற சுற்றுலா பேருந்து விபத்தில் சிக்கியது!

ஜூலை 10-ஆம் தேதி சிங்கப்பூரில் இருந்து வந்த சுற்றுலாப் பேருந்து மலேசியாவில் வடக்கு-தெற்கு விரைவுச் சாலையில் வடக்கு நோக்கிச் செல்லும் கார் மீது மோதியதில் இருவர் உயிரிழந்தனர் மற்றும் ஐந்து பேர் படுகாயமடைந்தனர்.

33 வயதான பேருந்து ஓட்டுனர், 42 வயதான இந்தோனேசிய பெண் பயணியும் உயிரிழந்துள்ளனர்.

இந்த பேருந்தில் 4 இந்தோனேசியர்கள், 3 சிங்கப்பூரர்கள், 2 கனடியர்கள், பிலிப்பைன்ஸைச் சேர்ந்த 3 பேர், சீனா மற்றும் ஸ்பெயினில் இருந்து தலா ஒருவர் உட்பட 19 பயணிகளை ஏற்றிச் சென்றதாக நிலாய் மாவட்ட துணை காவல்துறைத் தலைவர் மாட் கானி லதே கூறினார்.

முதற்கட்ட விசாரணையில் அந்த பஸ் லா ஹாலிடேஸ் டிராவல் & டூர்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமானது என கண்டறியப்பட்டது.

சிங்கப்பூரில் இருந்து கோலாலம்பூர் நோக்கிச் சென்ற சுற்றுலாப் பேருந்தும், புரோட்டான் வைரா கார் ஒன்றும் அதிகாலை 5 மணியளவில் விபத்துக்குள்ளானது. விபத்துக்கான காரணம் குறித்து விசாரிக்கப்படுகிறது.

பேருந்து அதிவேக நெடுஞ்சாலையின் வலது பக்கத்தில் உள்ள தூணில் மோதி பின்னர் இடது பாதையில் புரோட்டான் வைரா கார் மீது மோதியதாக மாட் கானி கூறினார்.

பேருந்தில் பயணம் செய்த 19 பேரில் 5 பேர் பலத்த காயம் அடைந்தனர். மற்ற 13 பயணிகள் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.

புரோட்டான் வைரா காரில் பயணித்தவருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், ஓட்டுநர் காயமின்றி உள்ளார்.

காயமடைந்த அனைவரும் சிகிச்சைக்காக செரெம்பனில் உள்ள துவாங்கு ஜாபர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.