நியூசிலாந்தின் மிகப்பெரிய நகரமான ஆக்லாந்தில் உள்ள மூன்று சீன உணவகங்களில் உணவருந்துபவர்களை கோடாரி போன்ற ஆயுதத்தால் தாக்கிய 24 வயதான சீன நாட்டவர் மீது செவ்வாய்க்கிழமை குற்றம் சாட்டப்பட்டது.
காயமடைந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்தனர்.
திங்கள்கிழமை இரவு 9 மணியளவில் உணவகங்களில் வாடிக்கையாளர்கள் தாக்கப்பட்டதாக அப்பகுதியிலிருந்து காவல்துறைக்கு பல அழைப்புகள் வந்தன.
அந்த நபர் உணவகங்களுக்குள் நுழைந்து திடீரென கோடாரி போன்ற ஆயுதத்தை எடுத்து உணவருந்துபவர்களை எந்தவித முன்னறிவிப்பும் இன்றி தாக்கியுள்ளார்.
சமூக ஊடகத்தில் வீடியோக்கள் வெளியிடப்பட்டது. அதில் உணவகத்தின் தளம் ஒன்றில் ரத்தம் வெள்ளமாக காணப்பட்டது.
அந்த நபர் சம்பவ இடத்தில் கைது செய்யப்பட்டார்.கடுமையான உடல் உபாதைகளை ஏற்படுத்தும் நோக்கில் காயப்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார், ஆனால் மேலும் குற்றச்சாட்டுகள் அவர்மீது குற்றச்சாட்டப்படும் என்று காவல்துறை தெரிவித்தது.
செவ்வாய்க்கிழமை, அவர் வடக்கு கடற்கரை மாவட்ட நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அவரின் பெயர் அல்லது தனிப்பட்ட விவரங்களை வெளியிட முடியாது என்று நீதிமன்றம் கூறியது.
இந்த தாக்குதல் வழக்கத்திற்கு மாறான சம்பவம் என்றும், இனவெறி தூண்டுதலுக்கான எந்த ஆதாரமும் இல்லை என்றும் காவல்துறை தெரிவித்தனர்.
“இச்சம்பவம் சம்பந்தப்பட்டவர்களுக்கு அதிர்ச்சியாகவும் பயமாகவும் இருந்தது´´ என்பதை வைட்மேட்டா கிழக்குப் பகுதி கமாண்டர் இன்ஸ்பெக்டர் ஸ்டீபன் சாகர் ஒப்புக்கொண்டார்.