Singapore news

யார் இந்த தங்கராஜ்? சிங்கப்பூரில் எதற்காக தூக்கு தண்டனை?

சிங்கப்பூரில் தூக்கு தண்டனை என்பது சட்டப்படியான தண்டனை.

போதைப்பொருள் கடத்தலை மிக மோசமான குற்றச் செயலாக சிங்கப்பூர் பார்க்கிறது.

போதைப்பொருள் கடத்தல், கொலை, பயங்கரவாத உட்பட 33 குற்றங்களுக்கு சிங்கப்பூர் சட்டத்தின்கீழ் மரண தண்டனை அளிக்கப்படுகிறது.

தூக்குத் தண்டனையை சிங்கப்பூர் பெரும்பாலும் விடியற்காலையில் நிறைவேற்றும்.

சிங்கப்பூரில் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டவர்களுக்கு உடந்தையாக இருந்தவருக்கு உடந்தையாக இருந்ததாக இந்திய வம்சாவளியை சேர்ந்த 46 வயதுடைய தங்கராஜ் சுப்பையா மீது குற்றச்சாட்டப்பட்டது.

2013-ஆம் ஆண்டில் ஒரு நபர் மலேசியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பார்சல் ஒன்றைக் கடத்தி வந்துள்ளார். அந்த பார்சலில் இருப்பது ஒரு கிலோ கஞ்சா.

கஞ்சா கடத்தி வந்த நபர் அதிகாரிகளிடம் பிடிபட்டுள்ளார். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

அதன் பின் தங்கராஜூவை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கைது செய்யப்படும் பொழுது அவர் மீது உள்ள குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.

இச்சம்பவத்திற்கும் எனக்கும் சம்பந்தமில்லை என்றார்.

இச்சம்பவத்திற்கும் உங்களுக்கும் தொடர்பு இருப்பதாக அதிகாரிகள் கூறினர். உங்களுடைய சிம் கார்டை கைது செய்யப்பட்ட நபரின் சிம்கார்டுடன் ஒப்பிட்டு பார்த்ததில் உங்களுக்கும் இது தொடர்பு இருப்பதாக காவல்துறை கூறியது.

கஞ்சா பிடிபட்ட இடத்தில் நான் இல்லை என்றார். கஞ்சா பிடிபட்ட இடத்தில் நீங்கள் இல்லை என்றாலும், விநியோகமானது உங்கள் பின்னணியில் செயல்பட்டுள்ளதாக காவல்துறை கூறியது.

2018-ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் நீதிபதியால் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டார்.

நீதிமன்றத்தில் அவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

தீர்ப்பை மறுபரிசீலினைச் செய்து மரண தண்டனையை நிறுத்தி வைக்க கோரியும் தங்கராஜ் சார்பாக மனு தாக்கல் செய்யப்பட்டது.

ஆனால், நீதிமன்றம் அதனை தள்ளுபடி செய்தது.

அவர் தாக்கல் செய்த மனுவில் உரிய காரணங்கள் இல்லாத அடிப்படையில் தள்ளுபடி செய்யப்பட்டதாக நீதிமன்றம் தெரிவித்தது.

அவர் 2019-ஆம் ஆண்டிலும் ஆகஸ்ட் மாதம் மேல்முறையீடு செய்தார். ஆனால், அதனையும் தள்ளுபடி செய்தது.

அதேபோல் 2022-ஆம் ஆண்டில் நவம்பர் மாதத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. நீதிமன்றம் அதனை தள்ளுபடி செய்தது.

இவ்வாண்டு பிப்ரவரி மாதத்திலும் அவர் மனு தாக்கல் செய்தார். அதனையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்நிலையில் நேற்று அவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

இவர் 9 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தங்கராஜூக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டதுக்கு ஐ.நா மனித உரிமை அமைப்பு போன்றவை கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் இவ்வாண்டு நிறைவேற்றப்பட்ட முதல் தூக்கு தண்டனை என்பது குறிப்பிடத்தக்கது.