கடன் அச்சுறுத்தல் சம்பவங்களில் ஈடுபட்ட இருவர் கைது…!!!!

கடன் அச்சுறுத்தல் சம்பவங்களில் ஈடுபட்ட இருவர் கைது...!!!!

சிங்கப்பூர்:சிங்கப்பூரில் கடன் மிரட்டல் சம்பவங்களில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் 27 வயது ஆணும் 32 வயது பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இருவரும் வெவ்வேறு கடன் மோசடி சம்பவங்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.

இம்மாதம் 22ஆம் தேதி ( டிசம்பர்2024) கேன்பரா தெருவில் உள்ள கழக வீடுகளின் நுழைவாயிலில் சிவப்பு நிற பெயிண்ட் அடிக்கப்பட்டதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.

நுழைவாயிலில் சைக்கிள் பூட்டும் போடப்பட்டிருந்தது.

அருகில் இருந்த சுவர் கிறுக்கப்பட்டு,கடன் அச்சுறுத்தல் குறிப்பும் விடப்பட்டிருந்தது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக கருதப்படும் பெண்ணை டிசம்பர் 24 ஆம் தேதி போலீசார் கைது செய்தனர்.

அதே நாளில், 44 உட்லண்ட்ஸ் டிரைவில் மற்றொரு கடன் தொல்லைச் சம்பவம் நடந்ததாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.

வீட்டின் நுழைவு வாயில் மற்றும் கதவின் மீது சிவப்பு நிறத்தில் பெயிண்ட் அடிக்கப்பட்டிருந்தது.

சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நபரை அன்றைய தினம் போலீசார் கைது செய்தனர்.

இருவரும் இன்று நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படவுள்ளனர்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு 5,000 முதல் 50,000 வெள்ளி வரை அபராதம் விதிக்கப்படலாம். மேலும் 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், 6 கசையடிகளும் தண்டனையாக விதிக்கப்படலாம்.