சீனாவின் புதிய அரசாங்கம் பெருங்குறிக்கோளுடன் கூடிய வரைவுத்திட்டத்தைச் செயல்படுத்த முனைப்பு காட்டிவரும்.
இந்நிலையில், சீனா சிங்கப்பூருடன் இணைந்து செயலாற்றவும் நவீனமயம், வளர்ச்சி தொடர்பான பரிமாற்றங்களை முடுக்கிவிடவும் விரும்புகிறது என்று சீனப் பிரதமர் லி சியாங் கூறியுள்ளார்.
ஆரம்பம் முதலே சீனாவின் நவீனமயமாக்கலில் சிங்கப்பூர் ஆழ்ந்த ஈடுபாடு காட்டி வருவதாகவும் இருதரப்பு உறவுகளைப் புதிய நிலைக்குக் கொண்டுசெல்ல தமது அரசாங்கம் விரும்புவதாகவும் திரு லி கூறினார்.
“இணைந்து செயல்படுவதன் மூலம் இருநாட்டு மக்களும் பயனடையலாம். அதோடு அமைதி, நிலைத்தன்மை, வளர்ச்சி, செழிப்பு உள்ளிட்ட மேலும் பலவற்றுக்கும் பங்களிக்கலாம்,” என்றார் திரு லி.
ஏப்ரல் 1-ஆம் தேதி சனிக்கிழமை அன்று சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் பிரதமர் லீ சியன் லூங்கைச் சந்தித்தபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
‘சீன மக்களுக்கு நன்கு அறிமுகமான நீண்டகால நண்பர்’ என்று பிரதமர் லீயைக் குறிப்பிட்டார்.
திரு லி, கடந்த 2018ஆம் ஆண்டு ஷாங்காயில் இருவரும் சந்தித்துப் பேசியதை நினைவுகூர்ந்தார்.
லி சீனப் பிரதமராக மூன்று வாரங்களுக்கு முன்னர்தான் பதவியேற்றார்.
அதன்பின் முதலாவதாக அங்கு சென்றுள்ள வெளிநாட்டுத் தலைவர்களில் பிரதமர் லீயும் ஒருவர்.
சிங்கப்பூரும் சீனாவும் இருதரப்பு உறவை முன்னெடுத்துச் செல்ல மிக வலுவான அடிப்படையைக் கொண்டுள்ளன. இதனை பிரதமர் லீ குறிப்பிட்டார்.
இருநாடுகளும் விரிவான ஒத்துழைப்பைக் கொண்டுள்ள நிலையில், குறிப்பிட்ட சில துறைகளில் அதனை மேலும் வலுப்படுத்த முடியும் என்றும் அவர் தெரிவித்தார்
சீனாவில் ஏப்ரல் 1-ஆம் தேதி சனிக்கிழமை அன்று சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்கிற்குச் சிவப்புக் கம்பள வரவேற்புடன் ராணுவ மரியாதை அளிக்கப்பட்டது.அப்பொழுது சீனா பிரதமர் லி யும் உடனிருந்தார்.