சிங்கப்பூரில் இந்த ஆண்டு சட்டவிரோதமாக பறவைகளுக்கு உணவளித்து எத்தனை பேர் பிடிபட்டனர் என்று நேற்று நடைபெற்ற நாடாளுமன்றத்தில் தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீயிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
பிடிபட்டவர்களில் எத்தனை பேர் மீண்டும் அதே செயலில் ஈடுபட்டனர் என்றும்,இந்த செயலில் ஈடுபடுவோரைக் கண்காணிக்க என்ன முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்றும் கேள்விகள் எழுப்பப்பட்டன.
சட்டவிரோதமாக விலங்குகளுக்கு உணவு அளிக்கும் முதல்முறையாக குற்றம் புரிவோர்களுக்கு வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் 5000 வெள்ளி வரை அபராதம் விதிக்கப்படலாம்.
மீண்டும் அதே குற்றச் செயலில் ஈடுபடுவோருக்கு 10000 வெள்ளி வரை அபராதம் விதிக்கப்படலாம்.
இந்த ஆண்டு ஜனவரி முதல் அக்டோபர் வரை பறவைகளுக்கு சட்டவிரோதமாக உணவு அளித்ததாக 209 பேர் மீது தேசிய பூங்கா கழகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அவர்களில் 30 பேர் மீண்டும் அதே குற்றத்தை செய்தவர்கள் என்று அமைச்சர் கூறினார்.இவ்வாறு செய்பவர்களை கண்காணிக்க CCTV கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
மேலும் தேசிய பூங்கா கழகம் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது.
பறவைகளுக்கு சட்டவிரோதமாக உணவு அளிக்கும் பிரச்சனையை சமாளிப்பதற்காக தேசிய பூங்கா கழகம், மக்கள் கழகம் மற்றும் நகர மன்றங்களுடன் இணைந்து செயல்படுகிறது.
தேசிய பூங்கா கழகம் இந்த ஆண்டு ஜனவரி முதல் அக்டோபர் வரை 2,200 க்கு மேற்பட்ட கண்காணிப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.