மதுரை-சிங்கப்பூர் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் வெடிகுண்டு மிரட்டல்…!!!

மதுரை-சிங்கப்பூர் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் வெடிகுண்டு மிரட்டல்...!!!

சிங்கப்பூர்:சிங்கப்பூர் நோக்கிச் சென்று கொண்டிருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததைத் தொடர்ந்து சிங்கப்பூர் விமானப்படை தனது F-15SG போர் விமானங்களைத் திரட்டியது.

தமிழகத்தின் மதுரையில் இருந்து புறப்பட்ட விமானம் நேற்று (அக்டோபர் 15) இரவு 8.50 மணிக்கு சிங்கப்பூரில் தரையிறங்க திட்டமிடப்பட்டதாக Flightradar24 இணையதளம் தெரிவித்துள்ளது.

அதன் பிறகு சுமார் ஒரு மணி நேரம் கழித்து 10.04 மணிக்கு தரையிறங்கியது.

இதனால் பயணிகள் பதட்டத்திலும் மிகுந்த அச்சத்திலும் இருந்தனர்.

AXB684 விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக விமான நிறுவனத்திற்கு மின்னஞ்சல் வந்ததாக பாதுகாப்பு அமைச்சர் இங் எங் ஹென் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இரண்டு F-15SG போர் விமானங்கள் விமானத்தை கூட்ட நெரிசலில் இருந்து விலகி தரையிறக்க வழிகாட்டின.

விமானம் தரையிறங்கியதும் விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

வெடிகுண்டு செயலிழப்பு குழுக்கள் வரவழைக்கப்பட்டன.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக பாதுகாப்பு அமைச்சர் இங் கூறினார்.

இந்தியாவில் இருந்து புறப்பட்ட மற்ற விமானங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளது.

புதுடெல்லியில் இருந்து சிகாகோ சென்ற ஏர் இந்தியா விமானம் வெடிகுண்டு மிரட்டல் காரணமாக கனடாவில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

இந்தியாவின் அயோத்தியில் இருந்து பெங்களூர் செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்திற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது என்று NTDV செய்தியை வெளியிட்டுள்ளது.

ஏர் இந்தியா, அதன் நீண்ட தூர சர்வதேச விமானங்களில் தொடர்ந்து இரண்டு நாட்கள் இந்த அச்சுறுத்தல்களை எதிர்கொண்டது.

எனவே விமான நிறுவனம் இது போன்ற வெடிகுண்டு மிரட்டல் சம்பவங்களில் ஈடுபட்ட நபர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க விருப்பதாக அறிக்கையில் தெரிவித்துள்ளது.