சிங்கப்பூரில் சாலை விதிகளை மீறிய சைக்கிளோட்டிகள்!!

சிங்கப்பூர்:சிங்கப்பூரில் சாலை விதிகளை மீறி சைக்கிள் ஓட்டிய குற்றத்திற்காக 6 பேர் மீது இன்று (அக்டோபர் 9) நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட உள்ளது. அவர்கள் அனைவரும் 17 முதல் 20 வயதுக்கு உட்பட்டவர்கள் என கூறப்படுகிறது.

இவ்வருடம் மே மாதம் 10ஆம் தேதி ஸ்காட்ஸ் வீதி மற்றும் ஆர்ச்சர்ட் வீதியில் 6 பேர் தமது பாதுகாப்புக்கும் மற்றவர்களின் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் சைக்கிள் ஓட்டியதாக சந்தேகிக்கப்படுகிறது.

அவர்கள் சரியான பாதையில் சைக்கிள் ஓட்டத் தவறியதாகவும், சாலையில் சைக்கிளை வைத்து சாகசம் செய்ததாகவும் கூறப்படுகிறது.இதில் குற்றம் சாட்டப்பட்ட இருவர் முறையான ஹெல்மெட் அணியாமல் இருந்ததாக கூறப்பட்டது.

ஒருவர் வேகக்கட்டுப்பாட்டு பொத்தான் இல்லாமல் சைக்கிள் ஓட்டிச் சென்றதாகவும், மற்றொருவர் மொபைல் போனை பயன்படுத்திக் கொண்டே சைக்கிள் ஓட்டிச் சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாலைகளில் ஆபத்து ஏற்படுத்தும் வண்ணம் சைக்கிள் ஓட்டுவது சட்டப்படி குற்றமாகும். பாதசாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் வாகனங்களை இயக்குமாறு போக்குவரத்து ஆணையம் சார்பில் அறிவுறுத்தப்பட்டது.