பொதுப் பேருந்துகளில் பாதுகாப்பை உறுதி செய்ய மேற்கொள்ளப்படும் நடைமுறைகள்…!!!

பொதுப் பேருந்துகளில் பாதுகாப்பை உறுதி செய்ய மேற்கொள்ளப்படும் நடைமுறைகள்...!!!

சிங்கப்பூர்:சிங்கப்பூரில் பொதுப் பேருந்துகள் விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து, பொதுப் பேருந்துகளின் பாதுகாப்பை மேம்படுத்த பொதுமக்களிடம் கருத்துக் கணிப்பும் நடத்தப்பட்டது.

நிலப் போக்குவரத்து ஆணையம் ஆகஸ்ட் 23ஆம் தேதி, இணையம் வழி ஆய்வைத் தொடங்கியது.

இந்த கருத்துக்கணிப்பு பொதுப் போக்குவரத்து பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான தீர்வுகளை கண்டறிய அதிகாரிகளுக்கு உதவும் என்று தெரிவிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து தற்போது சிறந்த பொதுப் போக்குவரத்துச் சேவைகளை வழங்குவதற்கு அதன் நடத்துனர்களுக்கு ஏதேனும் வழிகாட்டுதல்கள் அல்லது விதிமுறைகள் வழங்கப்பட்டுள்ளதா என நாடாளுமன்ற உறுப்பினர் ஜெரால்ட் கியாம் யீன் சொங் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.

அதற்குப் போக்குவரத்து அமைச்சர் சீ ஹாங் டாட் எழுத்துப்பூர்வ பதிலளித்தார்.

பொதுப் போக்குவரத்து ஆபரேட்டர்கள் சில கடுமையான பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றி பாதுகாப்பிற்கு எப்போதும் முன்னுரிமை அளிக்க வேண்டும்.

பேருந்துகளின் பாதுகாப்பு குறித்த வழிகாட்டுதல்கள் பெரும்பாலும் பேருந்துகளை இயக்குகின்ற ஓட்டுநர்களுக்கு வழங்கப்படுவதாக அமைச்சர் சீ சுட்டிக்காட்டினார்.

உதாரணமாக, இறங்கும் இடத்திற்கு மிக அருகில் பேருந்தை நிறுத்துவதினால் முதியவர்கள் பேருந்துகளில் இருந்து பாதுகாப்பாக இறங்க உதவுகிறது.

பேருந்து நகர்த்துவதற்கு முன்பு உள்ளே இருக்கும் பயணிகளை ஓட்டுநர்கள் சரிபார்த்தல் ஆகியவை சுமூகமான மற்றும் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும் என்று அமைச்சர் கூறினார்.

புதிய பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் அனுபவம் வாய்ந்த ஓட்டுநர்களுக்கான பயன்பாடுகள் உட்பட அனைத்து தளங்களிலும் பாதுகாப்புத் தகவல்கள் வெளியிடப்படுகின்றன.

பேருந்து ஓட்டுநர்களின் நடத்தையைக் கண்காணிக்க பேருந்துகளில் “டெலிமாடிக்ஸ் சிஸ்டம்கள்” பொருத்தப்பட்டுள்ளன.

இதன் மூலம் பேருந்து ஓட்டுநர்கள் குறித்த உடனடி கருத்துகளை வழங்கவும் பயிற்சி ஓட்டுநர்களை அடையாளம் காணவும் உதவுகிறது.

மேலும் ஓட்டுனர்கள் சாலைகளில் கவனம் சிதறும்போது அல்லது திடீரென பாதையை மாற்றினால் உடனடியாக அவர்களை எச்சரிக்கும் அமைப்பையும் SMRT உருவாக்கியுள்ளதாக அமைச்சர் சீ சுட்டிக்காட்டினார்.

இந்த நடவடிக்கைகளின் மூலம் பொதுப் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் அதில் பயணிக்கும் பயணிகள் மட்டுமின்றி சாலையைப் பயன்படுத்துபவர்கள் என அனைவரும் பயனடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.