சிங்கப்பூரில் மேல்நிலை வேலை அனுமதி பெற நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட ஊழியர்களின் கல்வித் தகுதி நம்பத்தகுந்தவையாக இருப்பதை உறுதிசெய்யவேண்டும் என்று அண்மையில் அறிவிக்கப்பட்டது.
அந்தப் புதிய மாற்றம் செப்டம்பர் முதல் நடப்புக்கு வரவுள்ளது.
போலியான கல்வித் தகுதிச் சான்றிதழ்கள் சமர்ப்பிக்கப்படும் சம்பவங்களைக் கையாள்வதே அதன் நோக்கம்.
ஆனால் கல்விச் சான்றிதழ்கள் உண்மைதானா என்பதை உறுதிசெய்ய மூன்றாம் தரப்பினரிடம் ஆதாரம் பெறும் போக்கு நீண்ட காலமாக நடப்பில் உள்ளதாக மனிதவளத் துறை நிபுணர் அரவிந்த் மதுசூதனன் கூறினார்.
“மனிதவள அமைச்சு முன்பு குறிப்பிட்ட சிலரிடம் மட்டுமே அத்தகைய ஆதாரத்தைக் கேட்டது. அப்போது முதலாளிகள் கல்விச் சான்றிதழ்களைச் சோதனையிடும் நிறுவனங்களை நாடுவர்.”
“இப்போது அது அனைவருக்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.”
அந்தப் புதிய மாற்றம் போலியான கல்விச் சான்றிதழ்களைக் கண்டறிய உதவும் என்று அவர் சொன்னார்.
ஆனால் நிறுவனங்களும் வெளிநாட்டு ஊழியர்களும் பாதிக்கப்படக்கூடும் என்று அவர் குறிப்பிட்டார்.
“மூன்றாம் தரப்பினரிடமிருந்து ஆதாரம் பெற 3 முதல் 6 வாரங்கள்வரை ஆகலாம். ஊழியர்கள் வேலையில் சேருவதில் தாமதம் ஏற்படலாம். உடனடியாக ஆட்களை வேலையில் சேர்த்துக்கொள்ள விரும்பும் நிறுவனங்கள் அந்தத் தாமதத்தால் பாதிக்கப்படலாம்.”
“நிறுவனங்கள் வெளிநாட்டு ஊழியர்களை அதிகம் சார்ந்திருப்பதைக் குறைப்பதும் உள்ளூர்வாசிகளை அதிகமாக வேலையில் சேர்க்கவைப்பதுமே அதன் நோக்கம்.”
அதேசமயம் வெளிநாட்டு ஊழியர்களும் சிங்கப்பூரின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியம் என்று அவர் குறிப்பிட்டார்.
“சிங்கப்பூரின் வளர்ச்சி வெளிநாட்டு முதலீடுகளை அதிகம் நம்பியிருக்கின்றது. அத்தகைய முதலீடுகளுடன் வெளிநாட்டு ஊழியர்களும் வருவர். அவர்களின் திறன்களும் அவசியம்.