விசாரணையின் ஒரு பகுதியாக நேர்காணலுக்கு வருமாறு காவல்துறை விடுத்த கோரிக்கையை முதலில் ஏற்ற திரு லீ சியன் யாங், அவரது மனைவி லீ சுவெட் ஃபெர்ன் பிறகு விசாரணைக்கு முன்னிலையாக மறுத்துவிட்டனர். இருவரும் தற்போது சிங்கப்பூரில் இல்லை.
சிங்கப்பூரின் முதல் பிரதமர் லீ குவான் இயூவின் இளைய மகனும் தற்போதைய பிரதமர் லீ சியன் லூங்கின் சகோதரருமான திரு லீ சியன் யாங்கிடமும் அவரது மனைவியான வழக்கறிஞர் லீ சுவெட் ஃபெர்னிடமும் காவல்துறை விசாரணை நடத்துகிறது.
அமரர் திரு லீ குவான் இயூவின் உயில் தொடர்பான வழக்கு விசாரணையின்போது இருவரும் பொய் சாட்சியம் அளித்ததாகவும் பொய் ஆதாரங்களைச் சமர்ப்பித்ததாகவும் நம்ப்படுகிறது.
விசாரணையின் ஒரு பகுதியாக, இத்தம்பதியரை நேர்காணலுக்கு வருமாறு காவல்துறை அவர்களிடம் கோரிக்கை விடுத்தது.
இதற்கு அவர்கள் இருவரும் முதலில் சம்மதம் தெரிவித்ததாக மூத்த அமைச்சரும் தேசிய பாதுகாப்புக்கான ஒருங்கிணைப்பு அமைச்சருமான டியோ சீ ஹியன் வியாழக்கிழமை (மார்ச் 2) நாடாளுமன்றத்தில் எழுத்துபூர்வ பதிலில் தெரிவித்தார்.
ஆனால் இருவரும் பிறகு மனம் மாறி விசாரணைக்கு முன்னிலையாக மறுத்துவிட்டதாக திரு டியோ கூறினார்.
விசாரணையில் ஒத்துழைக்குமாறு காவல்துறை அவர்களுக்கு அறிவுரை கூறியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவர்கள் இருவரும் வெளிநாடு சென்றுவிட்டதாகவும் அவர்கள் சிங்கப்பூரில் இல்லை என்றும் தெரியவந்துள்ளது.
“அவர்கள் சிங்கப்பூரில் இல்லாவிட்டாலும் விசாரணையை நடத்தி முடிக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று காவல்துறை அவர்களிடம் தெரிவித்துவிட்டது,” என்றார் மூத்த அமைச்சர் டியோ.
காவல்துறையினருடன் இருவரும் ஒத்துழைக்காதது வருத்தம் அளிப்பதாக அவர் கூறினார்.
தமது தந்தை வி்ட்டுச் சென்ற 38 ஆக்ஸ்லி சாலை வீடு தொடர்பாக 2017ஆம் ஆண்டிலிருந்து தமது சகோதரர் திரு லீ சியன் லூங், சகோதரி டாக்டர் லீ வெய் லிங் ஆகியோருடன் திரு லீ சியன் யாங்கிற்குக் கருத்து வேறுபாடு இருந்து வருகிறது.
திரு லீ குவான் இயூவின் கடைசி உயிலை திருவாட்டி ஃபெர்ன் முறையற்ற வகையில் கையாண்டதாக நீதிமன்றம் தீர்ப்பளித்து 2020ஆம் ஆண்டில் அவர் வழக்கறிஞர் தொழிலிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.
திரு லீ குவான் இயூவின் கடைசி உயில் அதற்கு முந்தைய உயிலைவிட முக்கியமான அம்சங்களில் மாறியிருந்தது. அத்துடன் திரு லீ தமது வழக்கறிஞரான குவா கிம் லீயுடன் கலந்தாலோசித்து உயிலில் சேர்க்க விரும்பிய அம்சங்கள் இடம்பெறவில்லை.
விடுபட்ட அம்சங்களில் ஒன்று எண் 38 ஆக்ஸ்லி ரோடு வீட்டை இடிப்பது குறித்தது. இது அமரர் லீயின் இறுதி உயிலுக்கு முந்திய உயிலான ஆறாவது உயிலில் இல்லாத ஓர் அம்சம்.
இதனால், தலைமைச் சட்ட அதிகாரி வழக்கறிஞர் சங்கத்துக்கு திருமதி லீ வழக்கறிஞராக முறை தவறி நடந்துள்ளார் என்ற புகார் அளிக்க நேர்ந்தது. இதைத் தொடர்ந்து இந்த பிரச்சினையை விசாரிக்க ஒழுங்குமுறை விசாரணைக் குழு அமைக்கப்பட்டது.
திரு லீ குவான் இயூவை திரு லீ சியன் யாங்கும் அவரது மனைவியும் தவறகாக வழிநடத்தியதாகவும் சத்தியப் பிரமாணம் எடுத்துக்கொண்ட பிறகும் பொய் சாட்சியம் அளித்ததாகவும் நீதிமன்றம் தெரிவித்ததை மூத்த அமைச்சர் டியோ சுட்டினார்.
காவல்துறையுடன் தம்பதியர் ஒத்துழைக்காததால் சந்தேகம் எழுந்திருப்பதாக அவர் தெரிவித்தார்.
“அவர்கள் கூறுவது போல அவர்கள் எவ்விதக் குற்றமும் புரிந்திருக்காவிட்டால் அதை நிரூபிக்க இவ்விசாரணை அவர்களுக்கு வாய்ப்பு அளிக்கும்.
“தங்கள் பக்க நியாயத்தை எடுத்துச் சொல்ல அவர்கள் விசாரணையில் ஒத்துழைக்க வேண்டும். இந்த விவகாரம் குறித்து விசாரணை தொடர்வதால் மேல் விவரங்களை வெளியிட முடியாது என்று மூத்த அமைச்சர் டியோ தெரிவித்தார்.