மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் ஐந்தாவது நாளாக தொடரும் மீட்பு பணி….!!

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் ஐந்தாவது நாளாக தொடரும் மீட்பு பணி....!!

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் உள்ள ஜாலான் மஸ்ஜித் இந்தியாவில் பாதாள குழிக்குள் விழுந்த பெண் கிடைக்கும் வரை மீட்கும் பணிகள் தொடரும் என காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்தியாவைச் சேர்ந்த 48 வயதான சுற்றுலாப்பயணி திருமதி விஜயலெட்சுமி கடந்த வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 23) ஜாலான் மசூதியின் நடைபாதையில் நடந்துச் சென்றார்.

அப்போது திடீரென அவரது காலடியில் பள்ளம் ஏற்பட்டதால் அவர் உள்ளே விழுந்தார்.

ஐந்தாவது நாளாக தொடரும் மீட்பு பணியானது தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அந்தப் பெண் கிடைக்கும் வரை தேடுதல் பணிகள் தொடரும் என்று டாங் வாங்கி மாவட்ட காவல்துறைத் தலைவரும் மீட்புக் குழுவின் தலைவருமான திரு சுலிஸ்மி அஃபென்டி சுலைமான் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

8 மீட்டர் ஆழமுள்ள பாதாள குழிக்குள் அவரைத் தேடுவதற்கு அருகிலுள்ள பாதாள சாக்கடை துளைகள் திறக்கப்பட்டன.

அவற்றிலிருந்து குப்பைகள் அல்லது தடைகளை அகற்ற Flushing எனப்படும் ஒரு அணுகுமுறை தற்போது பயன்படுத்தப்படுகிறது.

இந்த முறையில் 2 துளைகளுக்கு நீரோட்டத்தை நிறுத்துவதன் மூலம் மற்ற துளைகளில் நீர் அழுத்தம் அதிகரிக்கிறது.

நீரோட்டம் மீண்டும் தொடங்கும் போது துளைகளில் உள்ள அடைப்புகள் அகற்றப்படும்.

இதுவரை மேற்கொள்ளப்பட்ட மீட்புப் பணிகளின் போது, ​​அதிவேக நீரோட்டத்தினால் பாதாள சாக்கடையில் பாரிய கற்கள் மற்றும் குப்பைகள் அடித்துச் செல்லப்படுவதனால் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

தற்போது குப்பைகளை அகற்ற நீர் ஜெட்டுக்கள் பயன்படுத்தப்படுவதாக கூறினார்.

மேலும் சாக்கடை கால்வாய்களை ஆய்வு செய்ய கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

மழைநீரை தடுக்க பாதாள சாக்கடையில் நூற்றுக்கும் மேற்பட்ட மணல் மூட்டைகள் வைக்கப்பட்டுள்ளன.

மழைநீர் தேங்கி மீட்பு பணிக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுவரை திருமதி விஜயலெட்சுமி இருந்ததற்கான எந்த அறிகுறியும் இல்லை என திரு.சுலிஸ்மி அஃபெண்டி தெரிவித்துள்ளார்.

மலேசியாவின் நிபுணத்துவம் பெற்ற மீட்பு பணிக்குழுவினரால் தேடுதல் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.