சிங்கப்பூர்: சிங்கப்பூரில் தூய்மையை மேம்படுத்துவதற்கும், நேர்மறையான வாழ்க்கைச் சூழலை உருவாக்குவதற்கும் அரசு சமூகம் சார்ந்த பல்வேறு நடவடிக்கைகளை செய்து வருகிறது.
அந்த வகையில், சிங்கப்பூர் பொது சுகாதார மன்றம் கடற்கரை பூந்தோட்டத்தில் முதல் முறையாக CleanPod வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
CleanPod என்பது குப்பைகளை எடுக்கும் கருவிப் பகிர்வுத் தளமாகும்.இது தூய்மைப்படுத்துதலை எளிமையானதாகவும், நிலையானதாகவும் ஆக்குகிறது.
இது போன்ற சுற்றுச்சூழல் முயற்சிகளுக்கு ஆதரவாக, தூய்மைப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு வசதியாக முக்கிய சுற்றுலா தலங்களில் CleanPod வசதிகள் அமைக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.
SBS ட்ரான்சிட் மற்றும் கடலோரப் பூங்காவுடன் இணைந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
துப்புரவுப் பணிகளில் ஈடுபடுபவர்கள் இதில் உள்ள சாதனங்களைப் பயன்படுத்தலாம்.
இது தொடர்பான வெளியீட்டு நிகழ்வில் பொது சுகாதார மன்றம் மற்றும் SBS டிரான்சிட் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் CleanPod வசதியை அமைத்தல் மற்றும் வருடத்திற்கு குறைந்தது 3 முறை குப்பைகளை எடுப்பதற்கான நடவடிக்கைகளை ஏற்பாடு செய்தல் போன்றவை அதில் அடங்கும்.
ஒவ்வொரு ஆண்டும், பல சிங்கப்பூரர்களும் குடியிருப்பாளர்களும் ஒன்றுகூடி சுற்றுப்புற பகுதிகள்,கடற்கரைகள் மற்றும் பூங்காக்கள் போன்ற பொது இடங்களில் தூய்மைப்படுத்தும் நடவடிக்கைகளை ஏற்பாடு செய்கிறார்கள்.
இது போன்ற சமூக நடவடிக்கைகளில் மக்கள் தங்கள் பங்களிப்பைச் செய்யும் சமூக உணர்வானது சிங்கப்பூரை தொடர்ந்து தூய்மையான மற்றும் பசுமையான நகரமாகப் புகழ் பெறச் செய்துள்ளது.