கோலாலம்பூர் நோக்கி சென்ற சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்து!! பலியான சீன நாட்டவர்கள்!!
ஜூன் 29-ஆம் தேதி அன்று காலை 11 மணியளவில் ஜென்டிங் ஹைலேண்ட்ஸிலிருந்து கோலாலம்பூர் நோக்கி சென்று கொண்டிருந்த சுற்றுலாப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சீன நாட்டைச் சேர்ந்த இருவர் பலியாகியுள்ளனர். இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட எட்டு பேர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று நலமுடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த விபத்து தொடர்பாக சனிக்கிழமை 32 வயதுடைய பேருந்து ஓட்டுநரிடம் விசாரணை நடைபெற்று வருவதாகவும், தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பெண்டாங் மாவட்ட காவல்துறை தலைவர் சைஹாம் முகமது கஹர் கூறினார். அவரிடம் முறையான ஓட்டுநர் உரிமம் இல்லை என்பது தெரிய வந்துள்ளது.
மேலும் அவர் மீது பல்வேறு போக்குவரத்து விதிமீறல்களை மீறியதற்காக குற்றஞ்சாட்டப்பட்டு, 27 முறை சம்மன்களும் அனுப்பப்பட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது.
டிராவல் ஏஜென்சி நிறுவனம் நிலையான இயக்க நடைமுறைகளுக்கு(SOPs) இணங்க தவறியுள்ளது தெரிய வந்துள்ளது. அதனால் அதன் உரிமத்தை இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக மலேசியாவின் சுற்றுலா, கலை மற்றும் கலாச்சார அமைச்சகம்(MOTAC) தெரிவித்துள்ளது.
டிராவல் ஏஜென்சி நிறுவனம் மற்றும் அதன் துணை டிராவல் ஏஜென்சி நிறுவனம் SOP களை மீறியுள்ளதா என்பதை கண்டறிய விசாரணை மேற்கொள்ளப்படுகிறது என அமைச்சர் தியோங் கிங் சிங் கூறியுள்ளார்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காயமடைந்தவர்களை மலேசியாவுக்கான சீனத் தூதர் நேரில் சென்று நலம் விசாரித்தார்.அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டி அளித்தார். விசாரணையில் டிராவல் ஏஜென்சி மீது தவறு இருப்பது கண்டறிந்தால், அவர்களின் உரிமம் உடனடியாக ரத்து செய்யப்படும் என்று கூறினார்.
வரும் செவ்வாய்க்கிழமை MOTAC,போக்குவரத்து அமைச்சகம்,சாலைப் போக்குவரத்து துறை ஆகிய துறைகள் சம்பந்தப்பட்ட சிறப்பு கூட்டம் நடைபெறும் என்று அவர் கூறினார்.
Follow us on : click here