இந்தியா அபார வெற்றி!!ஆனந்த கண்ணீருடன் கோப்பையை ஏற்ற வீரர்கள்!!
இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையிலான டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டி நேற்று பார்படாஸ் மைதானத்தில் நடந்தது.
டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்தது. 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய தென்னாப்பிரிக்க அணி, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது. உலகக் கோப்பையில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் கோப்பையை வெல்லும் 17 வருட கனவு நினைவாகியுள்ளது. அனைத்து வீரர்களும் உணர்ச்சிவசத்தோடு ஆனந்த கண்ணீரில் கோப்பையை பெற்றனர். இறுதிப் போட்டியில் தன் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி அதிகபட்சமாக 76 ரன்கள் எடுத்தார்.
இறுதிப்போட்டி ஒரு கட்டத்தில் தென்னாப்பிரிக்காவிற்கு சாதகமாக அமைந்த போது ஹர்திக் பாண்டியா இந்தியாவுக்கு தேவையான முக்கிய விக்கெட்டை எடுத்துக் கொடுத்தார். தென் ஆப்பிரிக்கா அணியின் முக்கிய வீரராக கருதப்படும் க்ளாசனை வீழ்த்தியதும் நம்பிக்கை பிறந்தது. மேலும் சூரியகுமார் யாதவின் முக்கிய கேட்ச் வெற்றிக்கு திருப்புமுனையாக அமைந்தது. ஹர்திக் பாண்டியா மூன்று முக்கிய விக்கெட்டுகளை எடுத்து கொடுத்தார்.பும்ராவின் 16வது மற்றும் 18வது ஓவர்கள் முக்கியமானவை. 16வது ஓவரில் பும்ரா 4 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்தார். அதேபோல் பும்ராவும் 18வது ஓவரில் 2 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து விக்கெட்டை கைப்பற்றினார். அவரது 2 ஓவர்கள் மிக மிக முக்கியமானவை என்பதில் எந்த சந்தேகமில்லை.
37 வயதான ரோஹித் சர்மா, கபில்தேவ் (1983), எம்எஸ் தோனி (2007 மற்றும் 2011) ஆகியோருக்குப் பிறகு உலகக் கோப்பையை வென்ற மூன்றாவது இந்திய கேப்டன் என்ற பெருமையை சேர்த்துள்ளார்.
மேலும் இந்திய அணியின் முக்கிய வீரர்களாக கருதப்படும் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி எதிர்கால தலைமுறையினருக்கு வழிவிட்டு சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து தான் ஓய்வு பெற போவதாக அறிவித்தனர். இது குறித்து விராட் கோலி பேசுகையில் “இது எனது கடைசி டி20 உலகக் கோப்பை, நாங்கள் இந்த வெற்றியை அடைய விரும்பினோம். இது நல்ல வாய்ப்பாக அமைந்தது” என்று கூறினார்.
இந்நிலையில், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து ராகுல் டிராவிட் நேற்று அபார வெற்றியுடன் ஓய்வு பெற்றார். ராகுல் டிராவிட் தான் டி20 போட்டிகளில் ஓய்வு பெற்ற போதும் பிற போட்டிகளிலும் விளையாடிய போதும் கிடைக்காத வெற்றியை பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகும் போது கிடைத்ததை எண்ணி மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார்.
Follow us on : click here