"old is gold" என்பதை உணர வைத்த தாய்லாந்து திரைப்படம்!!
சிங்கப்பூர்: முதியோரின் மகத்துவத்தை எடுத்துக்காட்டும் வகையில் அமைந்த பாட்டி-பேரன் கதையால் திரையரங்கமே கண்ணீரால் நனைந்தது.
தாய்லாந்து திரைப்படமான “How to Make Millions Before Grandma Dies” சிங்கப்பூரின் வசூல் சாதனையை 11 நாட்களில் முறியடித்தது.
மே 30 அன்று வெளியான இத்திரைப்படம் சிங்கப்பூரில் அதிக வசூல் சாதனை செய்த தாய்லாந்து படம் என்ற பெருமையையும் பெற்றது.
சிங்கப்பூரில் ஜூன் 23 வரை இப்படம் 4.5 மில்லியன் வெள்ளி வசூலித்துள்ளது. இப்படம் இளைஞர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று வெகுவாக கவர்ந்திருப்பது ஆச்சரியமளிப்பதாக உள்ளது.
இந்தப் படத்தில் பாட்டிக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்படுகிறது.
பாட்டியின் பொறுப்பற்ற பேரன் அரை மனதுடன் அவரை கவனித்துக் கொள்ள முயற்சிக்கிறான்.
பாட்டியின் சொத்தில் தனக்கு பங்கு கிடைக்கும் என்று எண்ணி அவர் மீது அக்கறை காட்டுவது போல நடிக்கின்றான். ஆனால் காலப்போக்கில் அவனது போலித்தனம் உண்மையான பாசமாக மாறுகிறது.
வயதானவர்கள் நோய்வாய்ப்படுவது, பராமரிப்பதில் உள்ள சிரமங்கள், உடன் பிறந்தவர்களிடையே கருத்து வேறுபாடுகள் என பல விஷயங்களை படம் காட்டுகிறது.
படத்தைப் பார்த்தவர்களிடம் படம் குறித்த கருத்து கேட்கப்பட்டது.
அதில் ஜனனி என்பவர், நான் எப்படி பாட்டியிடம் நடந்து கொள்கிறேன் என்பதை சிந்திக்க வைத்தது எனவும் என்னால் முடிந்த அளவிற்கு என் பாட்டியை நன்றாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தை தூண்டியதாகவும் கூறினார்.
மேலும் பொன்னி என்பவர், எளிமையான கதை கருவாக இருந்தாலும் படம் முழுவதும் அன்பால் நிறைந்திருந்ததாக கூறினார். அதற்கு படத்தில் உள்ள ஒரு காட்சியை எடுத்துக்காட்டாக கூறினார்.
பாட்டி மாதுளை மரத்தை பேரன் பிறக்கும் போது நட்டு வைத்திருப்பார். அதில் வளரும் பழத்தை யாரையும் பறிக்க விடமாட்டார். அந்த மாதுளை மரம் அவரது அன்பை வெளிப்படுத்தியதாக கூறினார்.
சிலர் தமிழ் படங்களில் இதைவிட மனதை உருக்கும் காட்சிகள் இருப்பதால் இந்த படம் அவ்வளவாக என்னை ஈர்க்கவில்லை என்று ஒருவர் கூறினார்.
சிங்கப்பூரில் முதியோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
வயதான பெற்றோர், தாத்தா, பாட்டியுடன் நேரத்தை செலவிட வேண்டும் என்ற எண்ணத்தை குழந்தைகளின் மனதில் பதிய வைத்தால் அதுவே வெற்றி என்கிறார்கள் விமர்சகர்கள்.
Follow us on : click here