மார்சிலிங் கிரசென்ட் புளோக் 210ல் உள்ள ஒரு மினிமார்ட் முன்னால் 2022 டிசம்பர் 28ஆம் தேதி சம்பவம் நிகழ்ந்தது.
டான் கிம் ஹீ, 37, என்பவர் மீது டே கெங் ஹாக், 65, என்பவர் தீப்பற்றும் திரவம் ஒன்றை ஊற்றி, ‘லைட்டர்’ மூலம் தீமூட்டியதாக குற்றம் சாட்டப்பட்டது.
இரவு 10.10 மணியளவில் அழைப்பு வந்ததைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்குக் காவல்துறையினர் விரைந்து சென்றபோது அங்கு திரு டான் தீக்காயங்களுடன் காணப்பட்டார்.
உடனடியாக அவர் கூ தெக் புவாட் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டார்.
அப்போது அவர் சுயநினைவோடு இருந்ததாகவும் சம்பவ இடத்தில் இருந்த டே கைது செய்யப்பட்டதாகவும் காவல்துறை தெரிவித்தது.
சிகிச்சை பெற்று வந்த திரு டான் மரணமடைந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, டே மீதான கொலைமுயற்சி வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டு உள்ளது.
சாங்கி சிறைச்சாலை மருத்துவ நிலையத்தில் விசாரணைக் கைதியாக அவர் வைக்கப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கு மீண்டும் இம்மாதம் 27ஆம் தேதி விசாரணைக்கு வரும். கொலை வழக்கு நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை விதிக்கப்படலாம்.
திரு டான் எப்போது மரணமடைந்தார் என்ற விவரம் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்வில்லை.
அவர் சம்பவம் நிகழ்ந்த இடத்தில் இருந்த ‘மினிமார்ட்’டின் உரிமையாளர் என்பதும் குற்றம் சாட்டப்பட்ட டே, அழகு நிலையம் ஒன்றின் உரிமையாளர் என்பதும் அரசாங்கத்தின் நிறுவனப் பதிவகம் மூலம் தெரியவந்தது.